உலகக் கோப்பை கால்பந்து: தகுதி சுற்றில் கடினமான பிரிவில் இந்தியா


ind

வரும் 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில், கடினமான டி பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. இந்திய அணி இடம் பெற்றுள்ள பிரிவில் ஈரான்,ஓமன், துர்க்மெனிஸ்தான் மற்றும் குவாம் அணிகள் இடம் பெற்றுள்ளது.

நேபாள அணியை வீழ்த்தியதையடுத்து இந்திய அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பிரதான தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேற்று பிரதான சுற்றின் அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் இடம் பெற்றுள்ள ஈரான் அணி சர்வதேச தரவரிசையில் 40வது இடத்தில் உள்ளது. ஓமன் அணி 97வது இடத்தில் உள்ளது. துர்க்மெனிஸ்தான் 157வது இடத்திலும் குவாம் அணி 179வது இடத்திலும் உள்ளன. இந்திய அணி தற்போது 147வது இடத்தில் உள்ளது.

இந்த தகுதி சுற்றில் 40 அணிகள் பங்கேற்கின்றன. 8 பிரிவுகளாக ஒரு பிரிவுக்கு 5 அணிகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகளும் 2வது இடம் பிடிக்கும் 4 சிறந்த அணிகளும் அடுத்த தகுதி சுற்றுக்கு முன்னேறும். 12 அணிகள் பங்கேற்கவுள்ள கடைசி தகுதி சுற்றில் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும்

இதற்கு முன் இந்திய அணி ஈரானுடன் 6 முறை மோதியுள்ளது. இதில் ஒரே ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது. மீதி 4 ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. ஓமனிடம் 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு டிரா, ஒரு வெற்றி 2 தோல்வியை சந்தித்துள்ளது. துர்க்மெனிஸ்தானுடன் 4 ஆட்டங்களில் 2ல் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் சமனும் இன்னொரு ஆட்டத்தில் தோல்வியையும் சந்தித்துள்ளது. குவாம் அணியுடன் ஒரே ஒரு ஆட்டத்தில் விளையாடியுள்ள இந்திய அணி அதில் வெற்றி பெற்றுள்ளது.

Source: Vikatan

Previous பெண்களை கடத்தி பாலியல் அடிமைகளாக்கும் போகோஹரம் தீவிரவாதிகள்!
Next ராஜபக்சேவை பிரதமராக்கி காட்டுவேன்: விமல் வீரவன்ச சவால்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *