19 எம்.எல்.ஏ-க்களுக்கு இன்று கெடு முடிகிறது! சபாநாயகருடன் அரசுக் கொறடா முக்கிய ஆலோசனை!


TTV

அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ்பெற்ற நிலையில், கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் உங்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்கக்கோரி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேருக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவடைவதால், சபாநாயகருடன் அரசுக் கொறடா ராஜேந்திரன் ஆலோசனை நடத்திவருகிறார்.

TTV

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தலைமை பிடிக்காமல் அ.தி.மு.க-விலிருந்து வெளியேறி, தனி அணியைத் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். இந்த அணியை இணைக்க, பழனிசாமி அணித் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் அணியினர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும், சசிகலா குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று இரண்டு முக்கியக் கோரிக்கைகளை வைத்தனர். இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது பழனிசாமி தரப்பு. இதைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற பொதுக்குழுவில், தற்காலிக அ.தி.மு.க பொதுச் செயலாளரான சசிகலா நியமனம் ரத்து செய்யப்படுகிறது என்றும், அவர் நியமித்த நியமனங்கள், நீக்கல்களும் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

TTV

முன்னதாக, பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை, திரும்பப் பெறுவதாக தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர். இதனிடையே, 19 பேரின் எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்க வேண்டும் என்று அரசுத் தலைமைக் கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, “கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உங்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்பதற்கு ஒரு வாரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர். இதைத் தொடர்ந்து, 19 பேரும் சபாநாயரிடம் விளக்கமளித்தனர். இந்த விளக்கம் திருப்தியில்லை என்றும் செப்டம்பர் 14-ம் தேதிக்குள் ( இன்று) விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார்.

19 பேருக்கு அளிக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் தனபாலை அரசுக் கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் சந்தித்துப் பேசிவருகிறார்கள். இந்தச் சந்திப்பின்போது, 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதுகுறித்து தனபால் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள ரிசார்ட்டிலிருக்கும் 19 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், தினகரன் ஆட்சியைக் கலைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுவார் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, பழனிசாமி அணிக்குத் தாவிய எம்.எல்.ஏ ஜக்கையன், சபாநாயகர் தனபாலைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார். இதனால் ஜக்கையன் நடவடிக்கையிலிருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Previous கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட்... ஃபேஸ்புக்கிடம் சரண்டர் ஆன கதை! #StartUpBasics அத்தியாயம் 25
Next ‘தைரியமாக இருங்கள்... நான் இருக்கிறேன்!’ - எம்.எல்.ஏ-க்களுக்கு தினகரனின் ஆறுதல் #VikatanExclusive

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *