சென்னையில் வெளுத்து வாங்கும் கோடை மழை!


rain

சென்னை: சென்னையில் கோடை வெயில் மக்களை வாட்டி எடுத்த நிலையில், திடீரென பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த சில வாரங்களாவே கோடை வெயில் மக்களை வாட்டி எடுத்து வந்தது. வெயிலின் தாக்கத்தால் இரவு நேரங்களில் மக்கள் வீடுகளில் தூங்க முடியாமல் தவித்து வந்தனர். வீடுகளின் மொட்டை மாடிகளிலும், வீட்டின் வராண்டாவிலும் படுத்து உறங்கினர் மக்கள்.

தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே கோடை மழை தொடங்கிவிட்டது. இதனால், அந்த மாவட்டங்களில் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்பினர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று முதலே வானம் மந்தமான நிலையிலே காணப்பட்டது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய மழை, தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது.

பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள், அலுவலகத்திற்கு சென்றவர்கள் நனைந்தே போனார்கள். கல்லூரி மாணவிகள் மழையில் நனைந்து மகிழ்ச்சியாக சென்றனர்.

பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சில பேருந்துகளில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

மேலும், தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கொடைக்கானலின் முக்கிய நீராதாரமான மனோரத்தினம், சோலை அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 4வது நாளாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 11 ஆம் தேதி முதல் உதகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

உதகையில் நேற்று 24 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல, திருவாரூரில் பிற்பகலில் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த இந்த மழையால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே, தென் தீபகற்பத்தின் மேலடுக்கில் நிலவும் மிதமான காற்றுப்போக்கே மழைக்குக் காரணம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Vikatan

Previous தமிழகத்தில் கோயில், கோயிலாக வழிபட்ட சுரேஷ் ரெய்னா!
Next அரசு கேபிளில் ஊழல்: விசாரணை கோருகிறார் ராமதாஸ்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *