திருட்டுத்தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சி: ஹெச்.ராஜா கண்டனம்!


raja

சென்னை: திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தாலி அகற்றும் நிகழ்ச்சி திருட்டுத் தனமாக நடந்தது என்று பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் இன்று காலை தாலி அகற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதை அறிந்ததும் இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எழும்பூரில் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இந்து முன்னணியினர் 50 பேர் போராட்டம் நடத்த வந்தனர். அவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவதற்காக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அங்கு வந்தார்.

உடனே அங்கு வந்த போலீசார், தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தெரிவித்தனர். எனவே ‘போராட்டம் நடத்த வேண்டாம்’ என்று சமரசம் செய்தனர். இதை ஹெச்.ராஜாவும், இந்து முன்னணியினரும் ஏற்றுக் கொண்டனர்.

முன்னதாக அங்கு ஹெச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது,

தி.க.சார்பில் நடத்தப்பட்ட தாலி அகற்றும் நிகழ்ச்சி கடும் கண்டனத்துக்கு உரியது. இதில் குடும்பப் பெண்கள் யாரும் பங்கேற்கவில்லை. 10 மணிக்கு நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்துவிட்டு முன்கூட்டியே காலை 7 மணிக்கே நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். திருட்டுத்தனமாக நடைபெறும் திருமணங்களைத்தான் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஆனால், திருட்டுத்தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்திய கி.வீரமணியைக் கண்டிக்கிறேன்.

என்று கூறினார்.

இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம. கோபாலன் கூறுகையில்,

வீரம் இல்லாத வீரமணி நான்கு சுவர்களுக்குள் வைத்து நடத்திய நிகழ்ச்சியை பொது இடத்தில் வைத்து நடத்த தயாரா? ஏதாவது ஒரு குடிசை பகுதிக்குச் சென்று இந்த நிகழ்ச்சியை நடத்தி பார்க்கட்டும். அப்போது ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பது தெரியும் என்றார்.

Source: Vikatan

Previous இந்தியாவின் மதச் சார்பின்மையை அசைக்க முடியாது: பிரதமர் மோடி!
Next போக்குவரத்து தாெழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *