போயஸ் கார்டனில் என்ன நடந்தது? ஜெயலலிதா மருத்துவ அறிக்கை விவரம்


ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி, புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் விவரங்கள் வருமாறு…

”2016-ம் ஆண்டு, செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.15-க்கு போயஸ் கார்டனிலிருந்து ‘ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை’ என்று தொலைபேசி அழைப்பு வந்ததும், அப்போலோ மருத்துவமனையிலிருந்து மூன்று பேர் கொண்ட குழு போயஸ் கார்டன் சென்றுள்ளது. முதல் தளத்தில் இருந்த ஜெயலலிதா, மயங்கிய நிலையில் படுக்கையில் இருந்துள்ளார். அவரைத் தட்டி எழுப்பியபோது, எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. உடலில் அசைவு மட்டுமே இருந்துள்ளது. பின்னர், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது, அவருக்கு சராசரியாக 120/80 ஆக இருக்கவேண்டிய ரத்த அழுத்தம், 140/70 ஆக அதிகரித்திருக்கிறது. 120 எம்.ஜி-யாக இருக்க வேண்டிய சர்க்கரை அளவும் 508 எம்.ஜி என்ற அபாய நிலையில் இருந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாள்கள் முன்னதாகவே, ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆக்சிஜன் அளவு 100 சதவிகிதம் இருப்பதற்குப் பதிலாக 45 சதவிகிதம் மட்டுமே இருந்திருக்கிறது” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல்கள், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் ஆம்புலன்ஸுடன் செல்வது வழக்கம். அப்படி இருக்கும்போது, அவருக்கு உடல்நிலை மோசமடைந்தபோது, போயஸ் இல்லத்தில் ஆம்புலன்ஸ் இல்லாதது ஏன்? ஒரு மாநில முதல்வரின் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் வரை அவருக்கு சிகிச்சை வழங்கப்படாதது ஏன்? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

Previous ஃபேஸ்புக், கூகுள், இஸ்ரோ, விஜய் டி.விக்கு சிலந்தியின் சவால்! - ஸ்பைடர் விமர்சனம்
Next கமல் குறித்து ரஜினி பேசியவற்றின் பின்னணி என்ன? தமிழருவி மணியனின் ஆரூடம்

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *