‘தயவு செய்து என்னை மறந்திடு!’


vasagar‘தயவு செய்து என்னை மறந்திடு..!’- இப்படி நாம் ஓட்டுப் போட்டு மந்திரியான அரசியல்வாதி, நம்மை பார்த்து சொல்லலாம், கடன் வாங்கியவர் சொல்லலாம், காதலர்களுக்கிடையே சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நம் மனமே நம்மை நோக்கி, ‘சில பிரச்னைகளை மறந்திடு!’ என்று சொன்னால் தயவு செய்து கட்டாயம் மறக்கத்தான் வேண்டும்.

அன்றாடம் செய்திகளில் தற்கொலை இல்லாமல் செய்திகள் வருவதில்லை. அதிலும் குற்றவாளிகள் நிம்மதியாக தூங்க, நேர்மையானவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அதிக உடல், மன பலம் கொண்ட ராணுவ வீரர் கூட தற்கொலை செய்கின்றனர். அறிவில் சிறந்த மாணவர்கள் படிக்கும் ஐஐடி யில் படிப்பவர்கள் கூட, மனம் தளர்ந்து தற்கொலை செய்து கொள்வது கொடுமையின் உச்சம். பள்ளிக் கல்வியில் ஏற்படும் தோல்வியால் மனம் உடைந்து போவோரும் அதிகம்.

கடவுள் மனிதனுக்கு மூன்று வரம் கொடுத்துள்ளார் 1. தூக்கம் 2.மறதி 3. சிரிப்பு. இவை மூன்றும் குறையும் போது மனிதன் இயல்பு வாழ்க்கையை இழக்கின்றான் என்றால் மிகையாகாது.

உலகிலேயே இந்தியர்கள்தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் மண்ணோடு போராடும் உழைக்கும் வர்க்கமான உழவர்கள் மனம் ஒடிந்து தற்கொலை செய்து கொள்வது அதிகம் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்தியாவிலேயே அதிகமான அளவு கேரளாவில் தற்கொலை நடக்கிறது. சமீபத்தில் காரைக்குடியில் ஒருவர் தனது குழந்தை, மனைவியோடு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது மன விரக்தியின் உச்சம்.

மன அழுத்தம் பல வழிகளில் நம்மைத் தாக்கும்.

.தன்னம்பிக்கை இல்லாமை, விரக்தி மனப்பான்மை வேலைப்பளு, குடும்ப பிரச்சனை, பேராசையால் ஏற்பட்ட நஷ்டம் , ,அடுத்தவர் நிலை போல மாற ஆசைப்படுதல் போன்றவையே முக்கிய காரணிகள்.
அதிலும் குறிப்பாக நம்மை சூழ்ந்துள்ள நண்பர்கள், உறவினர்கள் போல நாமும் பணக்காரனாக மாற வேண்டும் என கடன் வாங்கி காணாமல் போனவர்கள் அதிகம். நாம் நாமாக இருப்பதே நம் வாழ்விற்கு நல்லது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட …

1. உணர்ச்சியை உறங்க வை :

உணர்ச்சிக்கு அடிமையாகி கட்சித் தலைவர் சிறையில் இருந்தாலும் மனம் ஒடிந்து சாவை விரும்புபவர்கள் முட்டாள்கள் தான். சிறையில் இருக்கும் தலைவருக்கு பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு பல கோடி சொத்துக்கள் இருக்கும். அப்பாவி இவர் செத்தால் குடும்பம் நடுத்தெருவில் தான் நிற்கும். உணர்ச்சியை உறங்க விடுவதே தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட முதல் படி.

2. தன்னம்பிக்கை வளர்த்தல் :

எப்போதும் எந்த விஷயத்தையும் நேர்மறையாக பேசவும்,செய்ய முடியும் என தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். எதிர்மறை விவாதங்களை நம் மனதில் புகுத்த கூடாது.

3. வேலைப்பளு குறைப்பு :

வேலை நேரத்தில் வேலையை செய்து விட்டு மற்ற நேரங்களில் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேச வேண்டும். முடிந்தால் கோவில், சுற்றுலா செல்லலாம். நம் மனதிற்கு மகிழ்ச்சி ,ஓய்வு வேண்டும் என்றால் விடுமுறை கூட .எடுத்துக்கொள்வதில் தவறில்லை.

4.. பணம் :

நம் பணம் நமக்கு உபகாரமாக இருக்க வேண்டுமே தவிர நம் பணமே நமக்கு எதிரியாக மாறக்கூடாது. உதாரணமாக மாதம் 30 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் வங்கியில் ரூ. 6000 ரூபாய் வீதம் மாதம் கடன் செலுத்தும் தகுதி பெறுகிறார். அவர் மேற்கொண்டு நகை,சொத்துக்களை அடமானம் வைத்து சொத்து சேர்க்க வேண்டும் என நினைப்பது தவறல்ல….ஆனால் நிரந்தரமில்லாத முதலீடு செய்வது, அதிக வட்டியுடன் அல்லல்படும் போது அவர் பணம் அவருக்கே எதிரியாக மாறும்.நாம் மற்றவர் போல சொத்து சேர்க்க வேண்டும் என நினைப்பதை விட நிம்மதியாக இருப்பதே மேல்.

5. தூக்கம், நகைச்சுவை உணர்வு:

சுமார் 6 மணி நேரத் தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல நம் மனதிற்கும் புத்துணர்வைத் தரும். கட்டாயம் இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நகைசுவை உணர்வோடு பேசுவது நம் மனதிற்கு சக்தியூட்டும், பிரச்னைகளை மறக்கடிக்கும்.

6. ஆன்மிகம் :

நமது மனதை ஒழுங்குபடுத்தும் பக்திப்பாடல்கள் கேட்பது, இறைவன் நாமத்தை சொல்லுவது,தியானம் செய்வது நம் மனதை வலுவாக்கும்.

7. உடற்பயிற்சி, உணவுப்பழக்கம்:

தினமும் எளிய நடைப்பயிற்சி, யோகா செய்வது மனதை இதமாக்கும் மருந்து. நம் உணவே நம் மனதை நிர்ணயிக்கிறது வாழைப் பழத்தில் உள்ள “செரோடொனின்” என்னும் வேதிப் பொருள் நம் மனதை சந்தோஷமாக வைக்க உதவுகிறது. குடி, போதைக்கு அடிமையானவன் மூளையை மலடாக்கி , மன நோயாளியாக மாற்றுகிறது. அது போல நாம் வலிமை தரும் சைவ உணவுகளை உண்ணும் போது மனம் வலிமையாக இருக்கும்.

8. மறதி :

கட்டாயம் கெட்ட நினைவுகளை மறக்க வேண்டும். தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டுமே தவிர தோல்வியை மறக்க வேண்டும். சூழ்நிலையால் ஏற்பட்ட குடும்ப பிரச்னைகளை உடனுக்குடன் மறந்து இயல்பாக நடக்க வேண்டும்.

9. பழகும் விதம் :

அனைவரிடத்திலும் நிறை, குறைகள் இருக்கும். அனைவரிடமும் நட்புடன் பழக வேண்டும். எல்லோரிடமும் நண்பர்களாக இருக்க முடியாவிட்டாலும் எதிரிகள் இல்லாமல் இருக்க வேண்டாம்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, நமது குழந்தைகள் நமது வயதான பெற்றோரை மதிக்க கற்றுக் கொடுப்பதும், நமக்காக பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற தன் நம்பிக்கையை வளர்ப்பதும், புகை, குடி போதை இல்லாமல் இருப்பதும் மன அழுத்தத்தில் இருந்து வருங்கால சமுதாயத்தை பாதுகாக்கும்.

வெற்றியும், தோல்வியும் கடிகாரத்தின் பெரிய முள், சிறிய முள் போன்றவை, ஒன்றை ஒன்று விரட்டித் தான் வரும் என்பதை புரிந்து நடக்கச் சொல்ல வேண்டும். வெற்றிக்குத் தேவை உழைப்பு மட்டுமே என்பதை புரிய வைத்தால் தயவு செய்து பிரச்னைகளை மனமே மறந்திடு !!

Source: Vikatan

Previous போக்குவரத்து ஊழியர்களுக்கு 5.5% ஊதிய உயர்வு: தொழிற்சங்கங்கள் ஏற்க மறுப்பு!
Next முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்பதா? சிவசேனாவுக்கு கண்டனம்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *