வெளிநாடுவாழ் இந்தியர் சுதாகரன்? (ஜெ. வழக்கு விசாரணை – 22)


jjj

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது. சாட்சியங்கள் கொடுத்த வாக்குமூலங்களை நீதிபதி குமாரசாமி முன்னிலையில் வாசித்து வாதிடுகிறார் பவானிசிங்.

சிவாவின் வாக்குமூலம்!

பெயர்: சிவா
தந்தை பெயர்: சொக்கலிங்கம்
கிராமம்: 18/13ஆ, திருநகர், வில்லிவாக்கம்
தாலுக்கா: சென்னை – 40
வயது: 53

நான் 1994 ஆம் ஆண்டு அண்ணாநகர் பிளாட் நம்பர் 1078, 19 வது மெயின் ரோட்டில் வசித்தேன். நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தேன். வடசென்னை பதிவாளர் ராஜகோபாலைத் தெரியும். 1994 ல் அவரைச் சந்தித்தேன். அவர் வெளிநாடுவாழ் இந்தியருக்கு 1000 முதல் 1500 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. குறைந்த விலையில் கிடைத்தால் சொல் என்றார். அதையடுத்து நான் பேப்பரில் விளம்பரம் கொடுத்தேன். அந்த விளம்பரத்தை பார்த்து பாண்டியநேசன் என்பவர் வெள்ளகுளம், சேரன்குளம், வீரன்குளம் பகுதிகளில் நிறைய நிலங்கள் இருப்பதாக சொன்னார். அதையடுத்து அவரோடு நான் திருநெல்வேலிக்குச் சென்றேன். கயத்தாறு, வெள்ளக்குளம் பகுதிகளுக்கு கூட்டிபோய் காண்பித்தார். 1 ஏக்கர் ரூ.2000க்கு நிலம் இருக்கு. புரோக்கர் கமிஷன் 500, பட்டா, சிட்டா மற்றும் போக்குவரத்துக்காக ரூ.1000 என்றார். இதை சென்னைக்கு வந்த பிறகு ராஜகோபாலுக்கு போன் பண்ணி விவரத்தைச் சொன்னேன். ஒரு மாதம் ஆகியும் எந்தத் தகவலும் கொடுக்கவில்லை.

அதையடுத்து நான் இந்து பேப்பரில் விளம்பரம் கொடுத்தேன். அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு ராஜகோபால் என்னிடம் தோட்டக்கலை ஆபீஸர் ராதாகிருஷ்ணனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ராதாகிருஷ்ணன், ‘இவர்தான் வெளிநாட்டுவாழ் இந்தியர் சுதாகரன்’ என்று எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். சுதாகரன் இயக்குநராக இருந்த ரிவர்வே அக்ரோ ஃபார்ம் கம்பெனிக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருவள்ளூர் திருவாரூர், தஞ்சை என பல மாவட்டங்களில் இருந்து 2,850 ஏக்கர் நிலங்களை வாங்கிக் கொடுத்தேன்.

ஜெ. வீட்டுப் பணியாளர் கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டிருக்கிறார்!

நீதிபதி: நிலங்கள் வாங்கியது உண்மை என்றுதான் அவர்களும் சொல்கிறார்கள். ஆனால், ஜெயலலிதாவிடம் நேரடியாக மற்றவர்களுக்குப் பணம் போனதற்கான ஆதாரங்கள் என்ன இருக்கிறது?
பவானிசிங்: இந்த வழக்கில் நேரடி ஆதாரங்கள் கிடையாது. ஆனால், மறைமுக ஆதாரங்கள் இருக்கிறது. ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த ஜெயராமன் அடிக்கடி பல வங்கிகளில் 10 லட்சம், 20 லட்சம், 50 லட்சம், 1 கோடி என போட்டிருக்கிறார். எந்த முகவரியில் இருந்து யார் பணத்தை வங்கிகளில் போடச் சொன்னார்கள் என்பதையும் தன் வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார். வங்கி அதிகாரிகளின் சாட்சியமும் இதை உறுதி செய்கிறது.

நீதிபதி: நேரடி ஆதாரங்கள் இல்லாமல் எப்படி இது ஜெயலலிதாவின் பணம் என்று கூற முடியும்?
பவானிசிங்: இதுபோன்ற வழக்குகளில் நேரடி ஆதாரங்கள் கிடைக்காது. தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள், மறைமுக ஆதாரங்களையும் ஆவணங்களையும் கொண்டு 66.65 கோடி சொத்து குவிக்கப்பட்டுள்ளதாக வழக்குப் போட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த ஆவணங்களைக் கொண்டே நான் வாதிடுகிறேன். கீழமை நீதிமன்றமும் விசாரித்து தண்டனையும் கொடுத்திருக்கிறது.

sudakaranaநீதிபதி: ஜெயலலிதா பணத்தில் 9 கோடி டெபாசிட் செய்துள்ளதாக சொல்கிறீர்கள். எந்தெந்த நாளில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது? அதற்கான ஆதாரங்கள் எங்கே?
மணிசங்கர் (ஜெ. தரப்பு வழக்கறிஞர்): (குறுக்கீடு) ஜெயலலிதா அக்கவுண்டில் இருந்து ஒரு சிங்கிள் பைசாகூட சசிகலாவுக்கோ, சுதாகரனுக்கோ, இளவரசிக்கோ மற்றும் கம்பெனிகளுக்கோ போகவில்லை. ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் கம்பெனிகள் வழக்கு காலகட்டத்துக்கு முன்பு பார்ட்னராக ஜெயலலிதா இருந்தார். நமது எம்.ஜி.ஆர் நிறுவனம் 1990ல் தொடங்கப்பட்டது. இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய்யான வழக்கு.

நீதிபதி: உங்கள் மீது போட்டப்பட்டுள்ள சார்ஜ் என்ன?
மணிசங்கர்: 120(பி) கூட்டுச்சதி.

நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) எப்படி 120(பி) போட்டீர்கள்?
பவானிசிங்: கூட்டுச்சதி உறுதிசெய்த நோக்கத்தில்தான் ஐ.பி.சி 120(பி) பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச்சதி செய்துதான் நிலங்களையும் சொத்துகளையும் வாங்கிக் குவித்துள்ளார்கள்.

நீதிபதி: ஒருவர் மீது 120(பி) வழக்கு போட வேண்டுமானால், அவர் எப்படி கூட்டுச்சதியில் ஈடுபட்டார், சதி எங்கு தீர்மானிக்கப்பட்டது, எந்தெந்த நாட்களில் பணப்பரிமாற்றம் நடைபெற்றது, அதில் யார் யார் ஈடுபட்டார்கள் என்ற அனைத்து அடிப்படை ஆதாரங்களையும் திரட்டி, மிக நீண்ட விசாரணைக்குப் பின் உண்மை என்று உறுதிசெய்தால் மட்டுமே 120(பி) வழக்கு பதிவுசெய்ய வேண்டும். ஆனால், இந்த வழக்கில் 120(பி) பதிவுசெய்த பிறகுதான் ஆதாரங்கள் தேடியதுபோல தெரிகிறது.
மணிசங்கர்: கூட்டுச்சதிக்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை. ஒரே வீட்டில் இருந்தார்கள் என்பதற்காக கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளதாக சொல்கிறார்கள். இது தவறு

அரை லோடு லாரி ஆவணங்கள் இருக்கு!

bavaniபவானிசிங்: நமது எம்.ஜி.ஆர் நாளிதழுக்கு 14 கோடி சந்தா வசூலித்தது தவறு. இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் போடும்போது அதை அவர்கள் காட்டவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போதுபோது ஜெயலலிதாவின் வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இவர்களாகவே காட்டினார்கள். பிறகு அது வருமானம் இல்லை என்று அவர்களே ஒப்புக்கொண்டார்கள். இப்படி இவர்கள் மாறி மாறி மறைத்து வந்ததால், கீழமை நீதிமன்றம் இதை வருமானமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், ஜெயலலிதா முறைகேடாக சம்பாதித்த பணம்தான் இது.

நீதிபதி: ஜெயலலிதாவின் பணம்தான் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?

பவானிசிங்: (தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை டி.எஸ்.பி சம்பந்தத்தைப் பார்த்து) என்ன ஆதாரம் இருக்கிறது?
சம்பந்தம்: குற்றப்பத்திரிகைகளிலும் ஆவணங்களிலும் இருக்கிறது.

நீதிபதி: (சம்பந்தத்தைப் பார்த்து) இதை புலன் விசாரணை செய்த அதிகாரி யார்?
சம்மந்தம்: நல்லமநாயுடு.

மணிசங்கர்: நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் நிறுவனம் 1990ல் தொடங்கப்பட்டது. வங்கி மூலமாகத்தான் சந்தா வசூலிக்கப்படுகிறது. 31 பேர் முதன்மை சாட்சியங்களாக தங்களுடைய வாக்குமூலங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
நீதிபதி: இந்த நிறுவனம் எம்.ஜி.ஆர் இருந்த காலகட்டத்தில் தொடங்கப்பட்டதா?

மணிசங்கர்: இல்லை. எம்.ஜி.ஆர் இருந்த காலகட்டத்தில் தன்னுடைய அரசியல் குருவான அண்ணா பெயரில் ‘நமது அண்ணா’ என்ற இதழை எம்.ஜி.ஆர் தொடங்கி நடத்தி வந்தார். அதேபோல ஜெயலலிதாவின் அரசியல் குருவான எம்.ஜி.ஆர் பெயரில் ‘நமது எம்.ஜி.ஆர்’ என்ற இதழை தொடங்கி நடத்தினார்கள். இது கட்சி பத்திரிகை. கட்சி தொடர்பான செய்திகளை வெளியிடுவார்கள். பொதுவாக அனைத்து பத்திரிகைகளும் ஓராண்டுக்கு சந்தா பெறுவது வழக்கம். அதுபோலத்தான் நமது எம்.ஜி.ஆர் இதழிலும் சந்தா வசூலிக்கப்பட்டது. அதற்கு முறையான ஆவணங்கள் இருக்கிறது.

நீதிபதி: 14 கோடி என்பது பெரிய தொகை. இத்தொகை சட்டப்படி பெறப்பட்டதா… இல்லையா?
மணிசங்கள்: முறையான அனுமதியோடும் சட்டப்படியும்தான் சந்தா வசூலிக்கப்பட்டிருக்கிறது.

நீதிபதி: நமது எம்.ஜி.ஆர் இதழுக்கு சட்ட விரோதமாகத்தான் பணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு தகுந்த ஆவணங்களோடும் ஆதாரங்களோடும் வாதிட வேண்டும்.
பவானிசிங்: எங்களிடம் உள்ள ஆவணங்களை லாரியில் ஏற்றினால் அரை லோடு இருக்கும். அதை அனைத்தையும் எழுத்துபூர்வமாக கொடுக்கிறேன்.

நீதிபதி: ஊழல் தடுப்பு சட்டம் 13(1)இயில் எங்காவது பத்திரிகை நடத்தக் கூடாது. சந்தா வசூலிக்க கூடாது என்று இருக்கிறதா என்று இந்த புத்தகத்தைப் பார்த்து சொல்லுங்கள்.
பவானிசிங்: (புத்தகத்தை வாங்கிக்கொண்டு மௌனமாக இருந்தார்.)

கங்கை அமரனின் முதல் படம் 16 வயதினிலே…

கட்டடப் பொறியாளர்கள் ஜெயபால், கோவிந்தனின் வாக்குமூலங்களை அடுத்து படித்தார் பவானிசிங்.

gangaiநான் 1996ம் ஆண்டு பொதுப்பணித் துறையில் கட்டட செயற்பொறியாளராக இருந்தேன். என்னுடைய தலைமை செயற்பொறியாளர் தகவலில் பேரில் நான், துணை செயற்பொறியாளர் பொன்னையா, துணை செயற்பொறியாளர் சுதர்சனன், இளநிலை செயற்பொறியாளர் வேணுகோபால், மின்வாரிய துணை பொறியாளர் ஷாம், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் நாங்கள் அனைவரும் க.எண் 149 அண்ட் 150 ஸ்ரீராம் நகர் டி.டி.கே. ரோடு சென்னை&18, டி.நகர் பத்மநாதபுரத்திலும், 1/240 புதிய மகாபலிபுரம் ரோடு, ஈஞ்சம்பாக்கம், 2/1, பி-3 சீஷெல் அவென்யூ, சோளிங்கநல்லூர் கிராமம், நெ.19, பட்டம்மாள் தெரு, சென்னை போன்ற கட்டடங்களில் கீழ்தளம், முதல் மாடி, இரண்டாவது மாடிகளில் பொருத்தப்பட்ட மரச்சாமான்கள், மார்பிள்ஸ், கிரானைட் ஆகியவற்றை மதிப்பீடு செய்தோம்.

பவானிசிங்: 1993ல் சசிகலாவுக்குச் சொந்தமான பையனூரில் இரண்டு அடுக்கு பங்களா கட்டினார். அந்தக் கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு விலை உயர்ந்த டைல்ஸ், மார்பிள்ஸ் பதிக்கப்பட்டது.

நீதிபதி: எவ்வளவு மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது?
பவானிசிங்: 5 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது.

நீதிபதி: டைல்ஸ், மார்பிள்ஸ் விலை மட்டும் எவ்வளவு?
குமார்: மார்பிள்ஸ் விலை ரூ.5000, வெள்ளை மார்பிள்ஸ் ரூ.6000 எனவும் மிகைப்படுத்தி போட்டிருக்கிறார்கள்.

மணிசங்கர்: இந்த பங்களா பிரபலமான இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், அவரது மனைவி மணிமேகலைக்குச் சொந்தமானது. கங்கை அமரன் தனிமையாக அமர்ந்து மியூஸிக் கம்போஸ் செய்வதற்காக இந்த பங்களாவைப் பயன்படுத்தினார். அவரிடம் இருந்து சசிகலா 7.10.1994ல் வாங்கினார்.
நீதிபதி: ரெஜிஸ்டர் வேல்யூதான் எடுத்துக்கொள்ள முடியும். புலன்விசாரணை அதிகாரிகள் குளறுபடி செய்திருக்கிறார்கள்.

பவானிசிங்: நல்ல திறமை வாய்ந்த புலன்விசாரணை அதிகாரிகள்தான் வேல்யூ செய்திருக்கிறார்கள்.
நீதிபதி: (மணிசங்கரைப் பார்த்து) பில்டிங் வேல்யூ மட்டும் தனியாக அட்டவணை போட்டுக் கொடுங்கள்.

மணிசங்கர்: மொத்தமாக பில்டிங் மட்டும் கணக்கீடு செய்து கொடுக்கிறோம். 1974ல் வெளிவந்த ‘16 வயதினிலே’ படம்தான் கங்கை அமரனின் முதல் படம். அந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர்தான் கங்கை அமரன்.

நீதிபதி: இது எந்த மாவட்டத்தில் இருக்கிறது?
மணிசங்கர்: செங்கல்பட்டு

நீதிபதி: கர்நாடகாவில் பண்ணை வீடு கட்ட வேண்டும் என்றால், அரசிடம் பர்மிஷன் வாங்க வேண்டும். தமிழ்நாட்டில் வாங்க வேண்டுமா?
சதீஷ் கிரிஜி (பவானிசிங் உதவியாளர்): தமிழ்நாட்டிலும் பர்மிஷன் வாங்க வேண்டும்.

Source: Vikatan

Previous வேலூர், திருவண்ணாமலையில் மழைக்கு 5 பேர் பலி!
Next என் இணையம்... என் உரிமை!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *