கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்!


ramadoss

சென்னை: கர்நாடக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்தை ரத்து செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரேந்திர ஹீராலால் வகேலா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒதிஷா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். குறிப்பாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளுக்குரிய அதிகாரம் நீக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தவறாகும்.

judகுஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வகேலா அப்பழுக்கற்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் வரலாற்று சிறப்பு மிக்க பல தீர்ப்புகளை அளித்திருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நாளிலிருந்தே வகேலாவை இடமாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவரைக் கர்நாடகத்திலிருந்து சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முயன்றபோது அதை வகேலா கடுமையாக எதிர்த்ததால் அம்முடிவு கைவிடப்பட்டது. இந்த நிலையில், நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவின் அதிகாரம் முடிவுக்கு வரும் நிலையில் அவசர அவரசமாக வகேலா மாற்றப்பட்டிருக்கிறார்.

இந்தியாவின் மூத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் ஒருவரான வகேலா அடுத்த சில மாதங்களில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறவுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ஒரு சில மாதங்கள் மட்டும் பணியாற்றுவதற்காக இன்னொரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவது முறையல்ல. வகேலா இப்போது 62 நீதிபதிகளைக் கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். இவரை இடமாற்றம் செய்ய வேண்டுமானால் இதைவிட பெரிய உயர்நீதிமன்றங்களில் ஒன்றுக்குத் தான் மாற்ற வேண்டும். அதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு ஆகும். ஆனால், 27 நீதிபதிகள் மட்டுமே உள்ள ஒதிஷா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வகேலா இட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த இடமாற்றத்திற்கும் நீதிபதி வகேலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதையும் மீறி அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது நியாயமான நடவடிக்கையாக தோன்றவில்லை.

தலைமை நீதிபதி வகேலா இடமாற்றம் செய்யப்பட்ட நேரமும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது. பவானிசிங் நியமிக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது புதிதாக விசாரணை நடத்த வேண்டியிருக்கும்.

இவ்வழக்கை இப்போது விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், இதற்காக புதிய நீதிபதியை நியமிக்க வேண்டியிருக்கும். அந்த புதிய நீதிபதி யார்? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்குத் தான் உள்ளது. யாருக்கும் வளைந்து கொடுக்காத தன்மை கொண்ட நீதிபதி வகேலா, ஏற்கனவே இந்த விஷயத்தில் மேலிடத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களை நிராகரித்தவர். இத்தகைய சூழலில் நீதியரசர் வகேலா இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களையும், யூகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கியது, அவரது மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை யாரும் கேட்காமலேயே 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டது போன்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவின் நடவடிக்கைகள் நீதித்துறை வட்டாரங்களில் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகிருக்கின்றன. இந்த நிலையில் வகேலா மாற்றப்பட்டிருப்பது இந்த ஐயங்களை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. நீதிபதி வகேலா இன்னும் இரு மாதங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீடிக்கலாம் என்ற போதிலும், அவை விடுமுறை காலம் என்பதால் அதனால் எந்த தாக்கமும் ஏற்படாது.

நீதிபதி வகேலாவின் இடமாற்றம் தொடர்பான சர்ச்சைகளையும், ஐயங்களையும் போக்க வேண்டியது உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் கடமை ஆகும். எனவே, வகேலாவின் இடமாற்றத்தை ரத்து செய்து அவருக்கு பதவி உயர்வு வரும் வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடர செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Source: Vikatan

Previous கடும் எதிர்ப்பையும் மீறி நடந்தது தாலி அகற்றும் நிகழ்ச்சி! (படங்கள்)
Next 45 நாள் மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *