ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தள்ளிபோகிறது!


Sasi

புதுடெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகிவரும் பவானிசிங்கை நீக்கக் கோரிய அன்பழகன் மனு மீதான விசாரணை, அரசியல் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதால், ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பும் மேலும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு விசாரணையில் அரசு தரப்பில் ஆஜராகி வரும் பவானி சிங்கை நீக்க கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கறிஞர் இருக்கும் போது, பவானி சிங் இந்த வழக்கில் எப்படி ஆஜரானார்?” என்று சரமாரி கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஜெயலலிதா சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கில் தீர்ப்பு வழங்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரான ஆஜராகிவரும் பவானிசிங்கை நீக்கக் கோரி அன்பழகன் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியான உடன், ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி வெளியிடப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது அன்பழகன் மனு மீதான விசாரணை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதால், ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பும் மேலும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மனு மீது மாறுபட்ட கருத்து தெரிவித்த நீதிபதிகள் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு விதித்த தடையை நீட்டிப்பதாக ஏதும் கூறவில்லை. எனவே கர்நாடக நீதிமன்றத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை விலக்கிக்கொள்ளப்பட்டதாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் சிறப்பு அமர்வில் உள்ள மேல்முறையீட்டு மனு தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இத்தகைய சூழலில், கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் படேல் கூறுகையில், “ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு விதித்த தடை நீக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் இருந்து எந்த ஒரு எழுத்துப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. அதன் பிறகே இவ்விவகாரத்தில் அடுத்த கட்ட நிலவரம் தெரியவரும்” என்றார்.

இருப்பினும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் குவிந்துள்ளனர். தீர்ப்புக்கு தடை நீட்டிக்கப்படாததால் இன்றைக்கே நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கக்கூடும் என அதிமுகவினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Source: Vikatan

Previous பவானிசிங்கை நீக்க கோரிய திமுக மனு அரசியல் அமர்வுக்கு மாற்றம்!
Next Alex Jones ‘Resolves’ Lawsuit With Chobani Yogurt, Issues Retraction

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *