குழப்பம், கோபம், சந்தேகம், ரெளத்திரம், உற்சாகம்… வெல்டன் பிக்பாஸ்! பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?


இத்தனைநாள் நம் வீட்டில், அலுவலகத்தில், கல்லூரியில், டீக்கடையில், பொது இடத்தில் பேசுபொருளாக இருந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதன்முதலாக இப்படி ஒரு நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது சிலருக்கு என்னவென்றே புரியவில்லை. சிலருக்கு இதெல்லாம் தமிழுக்கு செட் ஆகுமா? என்ற குழப்பம். சிலருக்கு நாட்டில் இத்தனை பிரச்னை இருக்கும்போது இதெல்லாம் தேவையா? என்கிற கோபம், ஒருத்தரோட அந்தரங்கத்தை படம் பிடித்துக் காட்டுவது சரியா? என்ற ரௌத்திரம், இதெல்லாம் நிஜமா, ஸ்க்ரிப்டா? என்ற சந்தேகம் என எல்லா திசைகளிலிருந்தும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. தொடக்கத்தில் ‘கமல் டிவி ஷோ பண்ணப்போறாராமே? இதெல்லாம் அவருக்கு தேவையா?’ என்று கேட்டவர்கள், பிறகு கமல் அல்லாமல் வேறு யாராலும் இதைச் சிறப்பாக செய்யமுடியாது என்று ஒப்புக்கொண்டார்கள்.

‘பிரபலங்கள்னு சொன்னீங்க.. இவங்கதான் பிரபலங்களா?’ என்று நகைத்தவர்களுக்கு இன்று எல்லார் முகங்கள் மட்டுமல்லாமல் குணங்களும் பரிச்சயம். இவர் நல்லவர், இவர் கெட்டவர். இவர் பொய் சொல்கிறார், இவர் நேர்மையாக இருக்கிறார். இவரை எனக்குப் பிடிக்கும், இவரை எனக்குப் பிடிக்காது என்று ஒவ்வொருவர் பற்றியும் நம்மிடம் ஒரு அபிப்ராயம் கொண்டிருந்தோம். நமது அலுவலகத்தை பிக்பாஸூடன் ஒப்பிட்டோம். தமிழக அரசியலை பிக்பாஸூடன் ஒப்பிட்டோம். எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் அடைத்துவைத்ததை பிக்பாஸூடன் ஒப்பிட்டோம். நமக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ஒரு அரசியல்வாதி தனது ஓட்டுகளை ஓவியாவின் ஓட்டுகளுடன் ஒப்பிட்டார்.

இது தேவையா? இவ்வளவு பில்டப் தேவையா? என்பதையெல்லாம் தாண்டி நல்லதோ கெட்டதோ இன்று தவிர்க்க முடியாததாகி இருக்கிறது பிக்பாஸ். முதல் நாளில் 14 பிரபலங்கள் என்று சொல்லி 15 பேரை உள்ளே அனுப்பியது முதல் 100 நாட்கள் என்று சொல்லி 98 வது நாளிலேயே முடித்துக்கொண்டது வரை நமக்குமே பல சர்ப்ரைஸ்கள். இனி இறுதி நாளில் என்ன நடந்தது என்பது பற்றிப் பார்க்கலாம்.

சாண்டி மற்றும் அவரது குழுவினரின் டான்ஸூடன் தொடங்கியது இன்றைய நிகழ்ச்சி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான வசனங்களை வைத்தே ஒரு பாடல் அமைத்து அதற்கு நடனமாடினார்கள். ஜூலியை வர்தா புயல் என்றது, ‘குழந்தை பேச்சுங்க.. தண்ணில விழுந்து போச்சுங்க’ என்று ஓவியா பற்றிய வரிகள் வரை செம.. செம. (தனி வீடியோவா போடுங்கப்பா) ரொம்ப பின் ஸ்க்ரீனில் மணலில் கமல் முகம் வரையப்பட, முகம் முழுமை பெற்றதும் கதவு திறந்து மேடைக்கு வந்தார் கமல். இந்த நிகழ்ச்சியில் அதிகம் கவனிக்கப்பெற்ற இன்னொன்று அவர் அணிந்துவரும் ஆடைகள். இன்று வெள்ளை வேட்டி, கருப்பு சட்டையில் வந்திருந்தார். ‘100 நாள்…யப்பா இவ்ளோ பெரிய வேலைய ஒப்புக்கிட்டமேன்னு நினைச்சேன்..

அப்டி போயிடுச்சு’ என்று சொடக்கு போட்டு தொடங்கினார். உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களில் ஆறரை கோடி பேர் அதாவது 85 சதவீதம் பேர் இந்நிகழ்ச்சியைப் பார்த்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கொடுத்து ‘தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் இது புதிய அத்தியாயம்’ என்றார். அதோடு ‘நான் நடிக்க வந்த பிறகு.. தமிழ் சினிமாவில் ஏற்பட்ட முக்கிய திருப்பங்களில் எல்லாம் பங்கு கொள்கிற வாய்ப்பு எனக்கு இருக்கும். அதை தொலைக்காட்சி திருப்புமுனையில் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி’ என்று சொல்லி நிகழ்ச்சியைத் துவக்கினார். 19 பேரில் இருந்து 4 பேர் எஞ்சியிருக்கிறார்கள். இவர்களில் யார் வெற்றியாளர் என்பதை உடனே சொல்லணும்னு எனக்கும் ஆசையா இருக்கு. அந்த ஒருவர் என்று ஆரம்பிக்க ஸ்டோர் ரூம் மணி அடித்தது. பேட்டரி மாத்தணுமாம் மாத்திட்டு வந்துடுறேன் என்று பிக்பாஸில் நாம் அடிக்கடி பார்த்து பழகிய காட்சிகளை நினைவூட்டினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமான இன்னொரு வார்த்தை ‘குறும்படம்’. ‘இப்போ உங்களைப் பத்தி ஒரு குறும்படம்’ என்று பிக்பாஸ் பற்றி மக்களிடம் கேட்டு தொகுத்திருந்த குறும்படத்தைப் போட்டுக்காட்டினார். ‘சிலர் இது பத்தி என்னன்னே தெரியாம இது வரக்கூடாதுனு நினைச்சாங்க.. எதுக்காக அப்படி சொன்னாங்கன்றதுக்குள்ளயெல்லாம் போக வேணாம். அது வேற ஏதோ காரணமா இருக்கும்’ என்று தனது வழக்கமான குறியீடு கலந்த பேச்சை எடுத்துவிட்டார். எத்தனையோ அறநூல்களின் மூலம் சொல்லி விளக்குவதைவிட இன்னொரு மனிதன் வாழ்ந்து காட்டினால் நமக்குத் தெளிவாகப் புரியும் என்று இந்நிகழ்ச்சி ஏன் தேவை என்பதற்கு விளக்கம் கொடுத்தார்.

அகம் டிவி வழி வீட்டிற்குள் நடக்கும் காட்சிகள் விரிந்தது. சிநேகன் கோலம் போட்டுவிட்டு சோகமாக வந்து அமர்ந்தார். ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் ஒலித்தது. வழக்கம்போல் ஒரு ‘வேக்கப் சாங்’ என்று கண்களைக் கசக்கிக் கொண்டு சோம்பல் முறித்தார்கள் ஆரவ், ஹரிஷ், கணேஷ் மூவரும். மெயின் டோர் திறக்கிறது. சிநேகன் திரும்பி ஆச்சர்யமாக பார்க்க, பழைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே வருகின்றனர். பெருமகிழ்ச்சிக்கும் வாய்ச்சொற்களுக்குமான மியூசிக்கல் சேரில் வாய்ச்சொற்கள் தோற்றுவிட பேச்சற்று நின்றார் கவிஞர். சிநேகன் கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப்பார்த்தது, யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று பார்க்க வந்ததுபோல. ஓவியா சிநேகனை, ‘டோன்ட் க்ரை பீ ஹேப்பி’ என்று சமாதானப்படுத்தினார். காலையில் எழுந்தவுடன் எல்லாரையும் பார்த்ததில் ஆரவ்வுக்கு செம ஷாக்.

காயத்ரி – ஆரவ், கணேஷ் – ஆர்த்தி என மாற்றி மாற்றி உள்ளே குசலம் விசாரித்துக்கொண்டிருக்க, வெளியே ஓவியா ‘மெர்சல்’ டான்ஸ் போட்டுக்கொண்டிருந்தார். (அட அப்புறம் ஆடலாம்.. போய் ஆரவ்வை பாரு தாயி.. அதுக்குத்தானே வெயிட்டிங்கு). பின் உள்ளே நுழைந்து வீட்டை ஓவியாவும்.. வீடு ஓவியாவையும் அங்குலம் அங்குலமாக ரசித்துக் கொண்டிருந்தார்கள். பரணி தனது பழைய படுக்கைக்கு அருகில் நின்று கொண்டு நினைவுகளில் மூழ்கினார். கஞ்சா கருப்பு, வையாபுரி என மாற்றி மாற்றி ஒவ்வொருவராக சிநேகனுக்கு ஆரத்தழுவி வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர். ‘இது கனவோ’ என்ற சிநேகனின் மன ஓட்டத்தைப் புரிந்து, ‘இது ரியல் நாட் ட்ரீம்.. நான் சொன்னேன்ல ஃபைனல்ஸ் அப்போ இருப்பேன்னு’ என்றார் ஓவியா. பிந்து, ரைஸா,சுஜா, அனுயா என்று வீடே களைகட்ட நேற்று ‘சேவல் பண்ணை’ போல ஆண்மயமாக இருந்த வீடு, இன்று சேட்டு வீட்டு கல்யாணம் போல கலர்கலராக ஜொலித்தது.பிக்பாஸ் வீட்டின் செட்டையும் அதற்கு ஏற்றார் போல், வட இந்திய திருமண வீடு போல் மாற்றி இருந்தார்கள்.

‘தொழில் முறை’ நண்பர்களான சக்தியும் ஹரிஷூம் டைமண்ட் திருடிய அனுபவத்தை பரஸ்பரம் பகிர்ந்துகொண்டார்கள். ரைஸா, ஹரிஷிடம் ‘உங்க கூட ஒரு செல்ஃபி எடுக்கணும்’ என்று கேட்க, சம்மன் இல்லாமல் ஆஜரான வையாபுரி, உள்ளே புகுந்து பூஜையை காலி செய்தார். வழக்கம்போல் கேமராவுடன் பேசத்தொடங்கினார் ஓவியா.. ‘உன்னை மிஸ் பண்ணல.. இதைதான் மிஸ் பண்ணேன்’ என்று இன்னொரு கேமராவைக் காட்டினார் (அந்த கேமராவின் சொந்தக்காரங்களுக்கு சொல்லியனுப்புங்கப்பா..!). ‘ஆரவ் அந்த ரூம்ல இருக்கு’ என்று அனுயா ஓவியாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

‘ரொம்ப வருத்தமா இருக்கு’ என்று ஓவியாவிடம் புலம்பிக்கொண்டிருந்தார் பரணி. கஞ்சா கருப்பு தன் பழைய நினைவுகளை காமெடியாக சொல்லிக்கொண்டிருந்தார். ‘இவ்ளோ ஃபேன்ஸை என் லைஃப்ல பாத்ததில்ல’ என்று வையாபுரி, ஹரிஷிடம் சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டிருந்தார். ஷாப்பிங் போனவர், ஒன்றரை மணிநேரம் போட்டோவுக்கு போஸ் மட்டுமே கொடுத்துவிட்டு வெளியே வந்தாராம். கேசுவலாக ஆரவ்வை சந்தித்து, ஆல் தி பெஸ்ட் சொல்லி ஹக் பண்ணிவிட்டு வெளியேறினார் ஓவியா. தன் முடிந்து போன காதல் பற்றி தெளிவான ஒரு புரிதலுக்கு ஓவியா வந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. இருவருமே அதை மிகவும் மெச்சூர்டாக கையாண்டார்கள். ஓவியா ஆர்மி பற்றி ஓவியாவிடமே விசாரித்துக்கொண்டிருந்தார் வையாபுரி. ‘உங்களுக்கு நல்ல ஃபேன்ஸ் இருக்காங்க.

என்ன ஒல்லியாகிட்டீங்க? பொண்டாட்டி எப்டி இருக்கீங்க?’ என்று ஓவியத்தமிழில் பேசினார். என்ன ஓவியா ஓவியானு கட்டுரை ஓவியாவேயே சுத்திசுத்தி வருதேனு நினைக்கவேண்டாம். அதிலும் ஜூலி எல்லாம் தன் தாய் கழகத்தைவிட்டுவிட்டு, ஓவியா பாட்டு பாடலாமா ? என ஓவியாவிடம் மட்டுமே பேசிக் கொண்டு இருந்தார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பிக்பாஸ் அறையில் இருக்கும் எல்லா கேமராவும் ஓவியா பக்கம் தான். வேறு வழியில்லாமல், ஓவியாவிடம் பேசியே ஆக வேண்டும் நிலை தான் மற்றவர்களுக்கு. இன்றைக்கு ஃபைனல்ஸே ஓவியாவுக்காகத்தான் என்பதுபோல கமல் உட்பட எல்லாரும் அவரையே மையம் கொண்டிருந்தார்கள். நான் மட்டும் என்ன விதிவிலக்கா!? . டைட்டில் 100 நாட்கள் காத்திருந்து வென்றவர் போன்றவற்றை எல்லாம் கடந்து, ஓவியா மக்களின் வெற்றியாளர் ஆயிற்றே?

Source: Vikatan

Previous இரண்டு இட்லி, ஒரு வடை சாப்பிட்டு ஜி.எஸ்.டி வரியை ஆய்வுசெய்த பின் கமல்ஹாசனைக் கிண்டலடித்த தமிழிசை!
This is the most recent story.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *