ஐபிஎல் கிரிக்கெட்: ராயல் சேலஞ்சர்ஸுக்கு அதிர்ச்சி அளித்த சன் ரைசர்ஸ்!


Cricket

பெங்களூரு: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 8வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஹைதராபாத் சன் ரைசர்சும் மோதின. ஹைதராபாத் அணியில் ஸ்டெயினுக்கு மீண்டும் இடம் கிடைக்கவில்லை.

டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்லும், கேப்டன் விராட் கோலியும் முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். கெய்ல் (21) பந்தை சிக்சருக்கு தூக்க முயற்சித்த போது கேட்ச் ஆனார். இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் அந்த அணிக்கு விக்கெட்டுகள் விழுந்தன.

கேப்டன் விராட் கோலி (41), டிவில்லியர்ஸ் (46) ஆகியோரைத் தவிர மற்றவர்களின் ஆட்டம் குறிப்பிடும்படி இல்லை. விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (9), மன்தீப்சிங் (0), டேரன் சேமி (6) ஒற்றை இலக்கில் வீழ்ந்தது பெங்களூருக்கு பின்னடைவாக அமைந்தது. முடிவில் பெங்களூரு அணி 19.5 ஓவர்களில் 166 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 2 ஓவர்களில் மட்டும் பெங்களூரு அணி 18 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை தாரை வார்த்தது.

ஹைதராபாத் தரப்பில் டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார், ரவி போபரா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து 167 ரன்கள் இலக்கை நோக்கி களம் புகுந்த ஹைதராபாத் அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் 27 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 57 ரன்கள் சேகரித்து நல்ல தொடக்கம் ஏற்படுத்தி தந்தார். 2வது விக்கெட்டுக்கு இறங்கிய கனே வில்லியம்சன் (5) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினாலும், ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் அசராமல் நிலைத்து நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். லோகேஷ் ராகுல் சிக்சருடன் ஆட்டத்தை நிறைவு செய்தார்.

ஹைதராபாத் அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷிகர் தவான் 50 ரன்களுடனும், ராகுல் 44 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

தனது தொடக்க லீக்கில் சென்னை சூப்பர் கிங்சிடம் தோற்றிருந்த ஹைதராபாத் அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். 2வது லீக்கில் ஆடிய பெங்களூருவுக்கு இது முதலாவது தோல்வியாகும்.

Source: Vikatan

Previous பவானிசிங் நீக்கப்படுவாரா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு!
Next அமெரிக்கா பற்றி எரியும்’ வீடியோ மூலம் ஐ.எஸ். மிரட்டல்

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *