முன்னோரின் ஆன்மாவைக் குளிரச் செய்யும் மகாளய பட்ச வழிபாடும், பலன்களும்!


gfdhh

மனிதர்களாகப் பிறந்தவர்கள் நிறைவேற்ற வேண்டிய, தேவ வழிபாடு, பிரம்ம வழிபாடு, பித்ரு வழிபாடு, அதிதி வழிபாடு, பூத வழிபாடு ஆகிய ஐந்து வழிபாடுகளில் முக்கியமானதாகக் கருதப்படும் பித்ரு வழிபாட்டை அனைவரும் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசிகளை நாம் பெறவேண்டும். பித்ருலோகத்தில் இருக்கும் நம் முன்னோர்கள், ஆடி அமாவாசையன்று நம்மை ஆசிர்வதிப்பதற்காக பூமிக்கு வரப் புறப்படுகிறார்கள். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளில் அவர்கள் பூமிக்கு அருகில் வந்து விடுவார்கள். எனவே, அவர்களை வரவேற்கும் வகையில் மகாளய பட்சத்தின் தொடக்க நாளான பிரதமை முதல் மகாளய அமாவாசை வரை நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதுடன் இறை வழிபாடும் செய்யவேண்டும்.

123

ஆவணி மாதம் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையன்று மகாளய பட்சம் ஆரம்பிக்கிறது. எனவே அன்று முதலே நாம் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். மகாளய அமாவாசையன்று புனித நீர்நிலைகளுக்குச் சென்று முறைப்படி நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு அவர்களுடைய ஆசிகளைப் பெறவேண்டும். அப்போது நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிப்பதுடன் நம்முடைய நல் வாழ்க்கைக்காக நாராயணனிடம் பிரார்த்தனையும் செய்வார்கள்.

கருட புராணம், வராக புராணம், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களில் பித்ரு வழிபாடு பற்றி பல தகவல்கள் உள்ளன. விஷ்ணுவின் அவதாரமாகத் தோன்றிய ராமர், கிருஷ்ணர் போன்றோரும் பித்ருக்களை பூஜித்து இருப்பதை புராணங்களில் நாம் காணலாம். சிவபெருமான்கூட வாரிசு இல்லாத வல்லாள மகாராஜனுக்கு தர்ப்பணம் செய்திருப்பதாக திருவண்ணாமலை தல வரலாறு மூலம் நமக்குத் தெரிய வருகிறது. இதிலிருந்தே பித்ரு வழிபாட்டின் மகத்துவம் எத்தகையது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

124

நம்முடைய கர்மவினைகளைத் தீர்ப்பதற்காகவே நமக்கு மனிதப் பிறவி ஏற்படுகிறது. எனவே, நம் பிறவிக்குக் காரணமான நம் முன்னோர்களை வழிபடவேண்டியது மிகவும் அவசியமாகிறது. பித்ருக்களை வழிபடாதவர்களின் வாழ்க்கை சீரும் சிறப்பும் இல்லாமல், அல்லல் நிறைந்த வாழ்க்கையாகவே அமையும். எனவே, பித்ரு வழிபாட்டை தவறாமலும் சிரத்தையுடனும் செய்யவேண்டும். ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை மற்றும் மாதம்தோறும் வரும் அமாவாசைகளில் பித்ரு வழிபாடு செய்வதுடன், மகாளய பட்ச நாள்களிலும் ஒவ்வொரு நாளும் பித்ருக்களை பூஜிக்கவேண்டும்.

மஹாளய பட்ச உச்ச தினமான அமாவாசையன்று சகல லோகங்களிலுமுள்ள தேவர்களும், முனிவர்களும், பூமிக்கு வந்து நதிக்கரைகளிலும் கடற்கரைகளிலும்த நீராடி தர்ப்பண பூஜையை செய்கிறார்கள். சூரியன், சந்திரன், யமன், இந்திரன் உள்ளிட்ட தேவாதி தேவர்களே இந்த பூஜைகளைச் செய்கிறார்கள் என்னும்போது, நாமும் இந்த நாளை நமது முன்னோருக்கான நினைவு தினமாகக் கொண்டாட வேண்டும். சூட்சும உடலோடு நம்மை நாடி வரும் பித்ருக்களை தர்ப்பணம், படையல் போன்றவற்றால் மகிழ்விக்க வேண்டும். இந்த நாட்களில் அசைவம் தவிர்த்து, மனதையும் உடலையும் தூய்மையாக வைத்திருப்பதும் அவசியம்.

125

ஏதாவது ஒரு புண்ணிய இடத்தில் தீர்த்தமாடுதல் நலம் தரும். காகத்திற்கு அன்னமிடுவது, பசுவுக்கு அகத்தி கீரை, புல் போன்றவை கொடுக்கலாம். ஏழை எளியவருக்கு அன்னதானம் செய்வது பித்ருக்களை நிறைவு செய்யும். தினமும் நம் வீட்டில் படங்களாக இருக்கும் நம் முன்னோர்களை எண்ணி வணங்க வேண்டும். மஹாளய அமாவாசை அன்று அவரவர்கள் வழக்கம் போல தர்ப்பணம், திவசம், பூஜைகளை செய்யலாம். இந்த பதினைந்து நாட்களில் நாம் நமது மறைந்து போன முன்னோர்களுக்கு செய்யும் எல்லா விஷயங்களும் நேரடியாக அவர்களைப் போய் சேருகிறது என்பது உண்மை. இந்த நாட்களில் அர்ப்பணிக்கப்படும் எள்ளும் நீரும் கூட நமது பித்ருக்களை அதிகம் மகிழ வைக்கும் என்பது புராணங்கள் சொல்லும் தகவல்.

ஆவணி மாத பெளர்ணமி முடிந்த அடுத்த நாளே மகாளய பட்ச காலம் ஆரம்பமாகி விடுகிறது. புரட்டாசி மாதம் வரும் அமாவாசை நாளே மகாளய அமாவாசை. இதற்கு இடைப்பட்ட 14 நாட்களும் பித்ருக்களை வணங்கும் தினங்கள்தான். மஹாளயம் என்றால் பெரும் திரளான என்றும், பட்சம் என்றால் பதினைந்து நாட்கள் என்றும் பொருள். பெரும்திரளாக பித்ருக்கள் வரும் இந்த பதினைந்து நாளில் ஒவ்வொரு நாளுமே வணங்கினால் ஒவ்வொரு விதமான பலன்களை அடையலாம். மகாளய பட்ச முதல் நாளான பிரதமை அன்று பித்ருக்களை எண்ணி வணங்கி சிவனுக்கான பூஜை செய்தால் செல்வ வளம் சேரும். மகாளய பட்ச இரண்டாம் நாளான துவிதியை அன்று பித்ருக்களுக்காக வேண்டி அம்பிகையைத் தொழுதால் மக்கள் செல்வம் கிட்டும். உங்கள் குழந்தைகள் ஒழுக்கமாக வளர்வார்கள். மகாளய பட்ச மூன்றாம் நாளான திரிதியை அன்று பித்ருக்களை வேண்டி வணங்கி காகத்துக்கு உணவிட்டு ருத்ரரை பூஜித்தால் எண்ணியவை யாவும் நிறைவேறும்.

128

நான்காம் நாளான சதுர்த்தி அன்று பித்ருக்களோடு கணபதியையும் வணங்கினால் சகல பயங்களும் நீங்கும். ஐந்தாம் நாளான பஞ்சமி அன்று பித்ருக்களை எண்ணி வணங்கி பைரவரை வணங்கினால் மரண பயம் நீங்கும். ஆறாம் நாள் சஷ்டி அன்று முருகப்பெருமானோடு பித்ருக்களை வணங்க நிலைத்த புகழ் கிடைக்கும். ஏழாவது நாள் சப்தமி அன்று பித்ருக்களோடு சப்த கன்னியரை வேண்ட சிறந்த பதவிகள் கிடைக்கும். எட்டாம் நாளான அஷ்டமி அன்று துர்கையோடு பித்ருக்களை வணங்கி வேண்டினால் அவர்கள் ஆசியால் ஞானமும் அறிவும் கிட்டும். நவமி அன்று திருமாலோடு வேண்ட பித்ருக்கள் உங்களுக்கு ஏற்ற உறவுகளை அளிப்பார்கள். பத்தாம் நாள் தசமி அன்று மகாலக்ஷ்மியோடு பித்ருக்களை வேண்ட கால்நடைச் செல்வங்கள் சேரும். பதினோராம் நாள் ஏகாதசி அன்று பெருமாளோடு பித்ருக்களை வணங்க கலைகளில் சிறந்து விளங்கலாம். பன்னிரண்டாம் நாள் துவாதசி அன்று பித்ருக்களோடு குருவை வணங்கினால் அமைதியான வாழ்வு கிட்டும்.

பதின்மூன்றாம் நாளான திரயோதசி அன்று பித்ருக்களுடைய ஆசியை வேண்டி சூரியனை வணங்க தீர்க்காயுள் கிட்டும். பதினான்காம் நாளான சதுர்த்தசி அன்று புண்ணிய நதிகளை எண்ணி வணங்க பித்ருக்களின் கருணையால் உங்கள் தலைமுறைக்கே பாதுகாப்பும் புண்ணியமும் கிடைக்கும். பதினைந்தாம் நாளான சிறப்பு மிக்க மகாளய அமாவாசை அன்று பித்ருக்களுக்கு சகல வழிபாடுகளையும் செய்து உங்கள் குலதெய்வத்தையும் வணங்கி வழிபட்டால் மேற்கூறிய அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

சென்ற 6-ம் நாள் தொடங்கிய இந்த மஹாளய பட்ச தினம் இன்றோடு நான்கு நாட்களை கடந்து விட்டது. இதுவரை பித்ரு பூஜையை செய்யாத அன்பர்கள் இனியாவது முடிந்த அளவில் செய்ய முயற்சிக்கலாமே?

Source: vikatan

Previous தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வுக்கு கொலை மிரட்டல்!
Next கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட்... ஃபேஸ்புக்கிடம் சரண்டர் ஆன கதை! #StartUpBasics அத்தியாயம் 25

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *