துப்பாக்கிச் சூடு சம்பவம்: மத்திய அரசிடம் ஆந்திர தலைமை செயலாளர் விளக்கம்!


Untitled

புதுடெல்லி: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பற்றி மத்திய அரசிடம் ஆந்திர அரசின் தலைமைச் செயலாளர் நேரில் விளக்கம் அளித்து உள்ளார்.

திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரங்களை வெட்ட வந்ததாக கூறி, 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது திட்டமிட்ட படுகொலை என்று கூறப்படுவதால், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யுமாறு ஆந்திர அரசுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

மேலும், இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்துமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஆந்திர மாநில அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. அத்துடன் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரின் பட்டியலை வருகின்ற 22 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறும் தெரிவித்து உள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நேரடி சாட்சிகளாக கருதப்படும் சேகர், பாலச்சந்திரன் என்ற இருவர் நேற்று முன்தினம் ஆணையத்தின் முன் ஆஜராகி அளித்த சாட்சியத்தை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த தகவல் வெளியானதும், அது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு அறிந்தார். அத்துடன் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, ஆந்திர மாநில அரசு இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. ஆனால், அந்த அறிக்கை மத்திய அரசுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஆந்திர மாநில அரசின் தலைமைச் செயலாளரை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

அதை ஏற்று ஆந்திர அரசின் தலைமைச் செயலாளர் கிருஷ்ணா ராவ், நேற்று டெல்லி சென்று மத்திய அரசின் உள்துறை செயலாளர் எல்.சி.கோயலை சந்தித்தார். அப்போது அவர் விளக்கங்களை அளித்ததுடன், சில ஆவணங்களையும் தாக்கல் செய்தார். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கு அனுமதி கொடுத்தது யார்? போன்ற உள்துறை செயலாளரின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்து உள்ளார்.

Source: Vikatan

Previous ஊர் ஒற்றுமைக்கு வெற்றிலை பிரி திருவிழா!
Next அவசர அவசரமாக நீதிபதி வகேலா மாற்றப்பட்டது ஏன்? - கேள்வி கேட்கும் கருணாநிதி!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *