விவசாயிகளுக்கு இழப்பீடு ரூ. 63… ஒரு மாநில அரசின் பெருந்தன்மை!


லக்னோலக்னோ: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.100, ரூ.63 என்று உத்தரப்பிரதேச மாநில அரசு இழப்பீடு வழங்கி, விவசாயிகளை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாட்டில் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் எதிர்பாராத விதமாக கனமழை பெய்தது. குறிப்பாக மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் பெரிதும் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு உள்ளானார்கள். கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் என்ன செய்வதென்று அறியாது திகைத்தனர்.

இந்நிலையில் அவர்களது காயத்தில் உப்பை தேய்த்து உள்ளது உத்தரபிரதேசம் அரசு. ஆயிரம் மற்றும் லட்சம் கணக்கில் செலவு செய்து வளர்த்த பயிர்கள் சேதம் அடைந்து உள்ளநிலையில், நிவாரணமாக மாநில அரசு ஒரு நேரம் சாப்பாட்டிற்கு கூட செலவிட முடியாத தொகையான ரூ. 100 மற்றும் ரூ. 63 ஐயும் வழங்கி வேதனையை அதிகரித்து உள்ளது.

பைசாபாத் மாவட்டம் வாஜித்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முகமது சாபீர், ஏக்கர் கணக்கில் கோதுமை பயிர் செய்து இருந்தார். மோசமான வானிலை மற்றும் பருவம் தவறிய மழையின் காரணமாக கோதுமை பயிர் அறுவடை செய்ய முடியாது அழிந்துவிட்டது. பருவம் தவறிய மழையானது அவரது குடும்பத்தை மோசமான நிலைக்கு தள்ளி உள்ளது. பின்னர் மாநில அரசு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்த அவரது குடும்பம், ஏதாவது அரசு தரப்பில் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். இந்த நம்பிக்கை அவர்கள் அரசு வழங்கிய காசோலையை பார்த்தபோது நொறுங்கி போனார்கள். ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த கோதுமை அழிந்ததற்கு வெறும் ரூ. 100 நிவாரணமாக வழங்கப்பட்டு, காசோலை கொடுக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக மற்றொரு விவசாயி ஷாகித் பேசுகையில், தனக்கு பாதி ஏக்கருக்கு பயிர் அழிந்ததற்கு ரூ. 63 நிவாரணமாக வழங்கப்பட்டு இருந்தது என்று தெரிவித்து இருந்தார். அவர் பேசுகையில் “அரசு எங்களுடன் ஏன் விளையாடுகிறது? என்னுடைய நிலத்தில் பயிர் செய்யப்பட்டு இருந்த பயிரானது, எனது குடும்பத்திற்கு உணவு அளிக்கும், நான் என்னுடைய மருத்துவ தேவை மற்றும் குழந்தைகள் படிப்புக்கு அதனை விற்பனை செய்வேன். ஆனால் ரூ. 63 ஐ வைத்து நான் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கிடையே ஒரு ஏக்கருக்கும் சற்றும் குறைவாக நிலம் வைத்து இருந்த விவசாயி முகமதுக்கு அரசு ரூ. 84 -க்கு காசோலை வழங்கி உள்ளது.

இதுபோன்ற விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதை அறித்த மாவட்ட நீதிபதி அரவிந்த் மலாப்பா பாங்காரி பேசுகையில், கவனக்குறைவு காரணமாக இது ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

“அறிக்கையின்படியே காசோலையானது வழங்கப்பட்டு உள்ளது, யாருக்கும் போதுமான அளவு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று அவர்கள் உணர்ந்தால் நாங்கள் அதற்கான நிவாரணத்தை வழங்குவோம். தேசிய பேரிடர் மேலாணமை மையம் அளித்த வழிகாட்டுதலையே நாங்கள் பின்பற்றி உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Source: Vikatan

Previous 2014, 15-க்கான தமிழறிஞர் விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு!
Next போக்குவரத்து ஊழியர்களுக்கு 5.5% ஊதிய உயர்வு: தொழிற்சங்கங்கள் ஏற்க மறுப்பு!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *