‘தைரியமாக இருங்கள்… நான் இருக்கிறேன்!’ – எம்.எல்.ஏ-க்களுக்கு தினகரனின் ஆறுதல் #VikatanExclusive


dinkaran

தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த எம்.எல்.ஏ-க்களிடம் போனில் பேசிய தினகரன், ‘தைரியமாக இருங்கள்.. நான் இருக்கிறேன்’ என்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தினகரன் தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. தினகரனை ஆதரித்த 22 எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்கள், இன்று தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்குத் தகவல் தெரிந்ததும், சில எம்.எல்.ஏ-க்கள் சோகத்தில் மூழ்கினர். சொகுசு விடுதியில் இல்லாத எம்.எல்.ஏ-க்கள், தங்களுடைய ஆதரவாளர்களிடம் மனவருத்தத்தைப் பகிர்ந்துகொண்டனர். நடவடிக்கை எடுக்கப்படாத எம்.எல்.ஏ-க்களும் அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தினகரனை ஆதரித்த ஜக்கையன் எம்.எல்.ஏ., மனம் மாறி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தினகரனுடன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

தகுதிநீக்க அறிவிப்பு வெளியானதும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான வெற்றிவேல், ‘இந்தத் தகுதி நீக்கம் செல்லாது’ என்று ஆவேசமாகக் கூறினார். அடுத்து, 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்திலும் சபாநாயகரின் நடவடிக்கைக்குத் தடை பெற மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம்குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். தகுதிநீக்கத்துக்குக் கண்டனமும் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களிடம் தினகரன் போனில் பேசியுள்ளார். அப்போது அவர், ‘தைரியமாக இருங்கள்… நான் இருக்கிறேன்’ என்று எம்.எல்.ஏ-க்களுக்கு ஆறுதல் கூறியதாகத் தகவல் வெளியானது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், “எங்களைத் தகுதிநீக்கம் செய்த தகவல் கிடைத்ததும் தினகரன் போனில் தொடர்புகொண்டார். எங்களிடம் ஆறுதலாக அவர் பேசினார். திருச்சி பொதுக்கூட்டத்துக்குப் பிறகு சசிகலாவைச் சந்தித்துவிட்டு, அடுத்த நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார். சட்டரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். நிச்சயம், சபாநாயகரின் தகுதிநீக்க நடவடிக்கைக்குத் தடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதற்கிடையில், நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, கர்நாடகவிலிருந்து இன்று இரவு புறப்படுகிறோம். திருச்சியில், தினகரனை நேரில் சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பயம்வந்துவிட்டது. சட்டசபையில் நாங்கள் இருந்தால், அவரால் நிச்சயம் பெருபான்மையை நிரூபிக்க முடியாது என்று கருதியே, எங்களைத் தகுதி நீக்கம் செய்துள்ளார். தைரியமிருந்தால், எங்களைத் தகுதிநீக்கம் செய்யாமல் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும். ஆனால், ஜனநாயகத்துக்கு விரோதமாக அவர் செயல்பட்டுள்ளார். கட்சித்தாவியதாக எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநரிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும், இந்த ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகத்தான் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தோம். ஆனால், அரசியல் காழ்பு உணர்ச்சியால் நாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளோம். நீதிமன்றத்தில் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும்” என்றனர்.

தொடர்ந்து, தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்துள்ளார் ஸ்டாலின். அந்தக் கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகுறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்குகுறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த வழக்கில், செப்டம்பர் 20-ம் தேதி வரை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடத் தடை உள்ளது.

செப்டம்பர் 20-ம் தேதிக்குப் பிறகு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நீதிமன்றமோ அல்லது ஆளுநர் தரப்பிலோ உத்தரவிடப்பட்டால், அதைச் சமாளிக்கவே 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் என்று சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கும் நடவடிக்கையும் தலைமைச்செயலகத்தில் தீவிரமாக நடந்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து நடக்கும் அரசியல் பரபரப்புக்கிடையே, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வருகிறார். அவரது வருகையும் பரபரப்பை அதிகமாக்கியுள்ளது.

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், “குறுக்குவழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற முடியாது. தகுதிநீக்கம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்” என்று சுருக்கமாகத் தெரிவித்தார்.

Source: Vikatan

Previous 19 எம்.எல்.ஏ-க்களுக்கு இன்று கெடு முடிகிறது! சபாநாயகருடன் அரசுக் கொறடா முக்கிய ஆலோசனை!
Next “ஆடியன்ஸுக்கு 36% புரிஞ்சா போதும்!” - ‘துப்பறிவாளன்’ விமர்சனங்களுக்கு மிஷ்கினின் பதில்

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *