தி.க.வின் தாலி அகற்றும் போராட்டம்… குஷ்பு கருத்து!


khush

சென்னை: திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி, தாலி கட்டும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவர்களின் கருத்தை பதிவு செய்ய நடத்தப்பட்டது என்று நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கருத்து தெரிவித்து உள்ளார்.

திராவிடர் கழகம் நேற்று தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் 21 பெண்களுக்கு தாலி அகற்றப்பட்டது. இந்து முன்னணி, இந்து மகாசபை உள்பட 10 அமைப்புகள் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா தொண்டர்கள் பெரியார் திடல் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிகழ்ச்சி குறித்து நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறும்போது, ”பெரியார் காலத்தில் இருந்தே தாலி பற்றிய விவாதம் நடந்து வருகிறது. திராவிடர் கழகத்துக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அதன்படி அவர்கள் நடக்கிறார்கள். தினமும் தாலி கட்டிக்கொள்ளும் திருமணங்கள் நடைபெறுகின்றன. அவற்றை திராவிடர் கழகத்தினர் தடுத்து நிறுத்தவில்லை. தாலி கட்டும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தங்கள் கருத்தை பதிவு செய்யும் விதத்தில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

தாலி கட்டுவதும், மறுப்பதும் முழுக்க முழுக்க ஒரு தனி நபரின் விருப்பம். தாலி கட்டிக்கொள்ளலாமா? கூடாதா? என்பதும் தனிநபர் விருப்பம் சம்பந்தப்பட்டது. திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சி சரியா? தவறா? என்பது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதத்தில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதை ஏன் மற்றவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்? இது ஜனநாயக நாடு இதை வைத்து சமூகத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது” என்று கூறி உள்ளார்.

Source: Vikatan

Previous இனி இணையதள சமத்துவம் இந்தியாவில் சாத்தியமா?
Next டப்பிங் சீரியலுக்கு எதிராக களத்தில் இறங்கும் டிவி நடிகர், நடிகைகள்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *