அரசு கேபிளில் ஊழல்: விசாரணை கோருகிறார் ராமதாஸ்!


Ramadoss

சென்னை: அரசு கேபிள் தொலைக்காட்சி ஊழல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பொழுதுபோக்கு மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பும் இந்த நிறுவனத்தில், பொழுதுபோக்காக செய்தியே வெளியில் கசியாமல் நடக்கும் ஊழல்களால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,740 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுகிறது.

மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிக தரத்திலான தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையை வழங்கும் நோக்கத்துடன் 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் 4 ஆண்டுகள் செயல்படாமல் முடங்கிக் கிடந்தது. 2011 ஆம் ஆண்டில் அரசு கம்பிவடத் தொலைக்காட்சி சேவையை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா முழு அளவில் தொடங்கி வைத்தார். அப்போது, பொதுமக்கள் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் நலனை கருத்தில் கொண்டுதான் இந்த புதிய சேவைத் தொடங்கப்பட்டிருப்பதாகவும், இது ஒரு மக்கள் நல நடவடிக்கைதான் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக மாத சந்தா ரூ.70 ஆக இருக்கும் என்றும், இதை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வசூலித்து ஒரு இணைப்புக்கு ரூ.50 வீதம் எடுத்துக் கொண்டு மீதமுள்ள 20 ரூபாயை அரசுக்கு செலுத்தினால் போதுமானது என்றும் அறிவிக்கப்பட்டது. இதை பயன்படுத்திக் கொண்டுதான் அரசு கம்பிவட நிறுவனத்தலைவர், நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோர் கோடிக்கணக்கில் ஊழல் செய்கின்றனர்.

உதாரணமாக, தமிழ்நாட்டில் அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நிறுவனத்திற்கு 1.5 கோடி இணைப்புகள் உள்ளன. ஆனால், கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக மக்கள் தொலைக்காட்சித் தொடர்ந்த வழக்கில், அந்த நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் 50 லட்சம் இணைப்புகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஓர் இணைப்புக்கு ரூ.70 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகம் முழுவதும் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சராசரியாக ஓர் இணைப்புக்கு ரூ.120 வசூலிக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும், கணக்கில் வராத ஒரு கோடி இணைப்புகள் மூலமாக மட்டும் மாதத்திற்கு ரூ.120 கோடி கிடைக்கிறது. கணக்கில் காட்டப்படும் 50 லட்சம் இணைப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட ரூ.50 கூடுதலாக வசூலிக்கப்படுவதால் அந்த வகையில் ரூ.25 கோடி வருவாய் கிடைக்கிறது. அதாவது, மாதத்திற்கு ரூ.145 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.1,740 கோடி கணக்கில் காட்டப்படாத வருமானம் அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் குமரகுருபரன் மற்றும் அவருக்கு மேல் உள்ளவர்களால் சட்டவிரோதமாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

இன்னொருபுறம், சில தொலைக்காட்சிகளை முதன்மை அலைவரிசையில் ஒளிபரப்புவதற்காக கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கும் அவலமும் அரசு கம்பிவடத் தொலைக்காட்சியில் அரங்கேறுகிறது. உள்ளூர் தொலைக்காட்சிகளை கணக்கில் காட்டாமல் ஒளிபரப்புவதற்காக வாங்கப்படும் கையூட்டு, ஒளிபரப்புக் கருவிகளை வாங்குவதில் நடக்கும் ஊழல் ஆகியவற்றையும் கணக்கில் சேர்த்தால், கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊழல் நெடுந்தொடர் போல நீண்டு கொண்டே போகும்.

ஊழல் ஒருபுறமிருக்க, அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் காட்டும் பாகுபாடும், திணிக்கும் ஏகபோகமும் வர்ணிக்க முடியாதவை. மக்களால் விரும்பிப் பார்க்கப்படாத ஜெயா தொலைக்காட்சிக் குழுமத்தின் 4 தொலைக்காட்சிகளையும் கட்டணத் தொலைக்காட்சிகளாக அதன் நிர்வாகம் அவசர அவசரமாக அறிவித்தபோது, மறுப்பேதும் கூறாமல் அதை ஏற்றுக்கொண்ட கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம், அவற்றுக்கு முன்னணி வரிசையில் E-5, E-6, E-7,E-8 ஆகிய இடங்களை இலவசமாக ஒதுக்கியதுடன் ஜெயா தொலைக்காட்சிக் குழுமத்திற்கு மாதம் சுமார் ரூ.1.25 கோடியை கட்டணமாக வழங்குகிறது. ஜெயாத் தொலைக்காட்சிக்கு இலவசமாக இடம் ஒதுக்குவதுடன் மாதம் ரூ.1.25 கோடி கட்டணமும் வழங்கும் கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம், இலவசமாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.

அ.தி.மு.க. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் துண்டித்துள்ளது. இதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டதை அடுத்து S-4 என்ற அலைவரிசையில் ஒளிபரப்பான மக்கள் தொலைக்காட்சியை U-40 என்ற கடைநிலை அலைவரிசைக்கு மாற்றி யாரும் பார்க்க முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி, மற்ற இலவசத் தொலைக்காட்சிகளும் இப்போதுள்ள அலைவரிசைகளிலிருந்து நீக்கப்படும் என்றும் கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் வரியுடன் சேர்த்து மாதம் ரூ.70 லட்சம் செலுத்தினால் மட்டுமே அவற்றுக்கு பழைய அலைவரிசை வழங்கப்படும் என கம்பிவட தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் சேவை நோக்குடன் தொடங்கப்படுவதாகத்தான் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசைக்கும் ஆண்டுக்கு சுமார் ரூ.8.40 கோடி செலுத்த வேண்டும் என்று வணிக நோக்குடன் கூறுகிறது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் தர பணம் வேண்டும் என்பதால்தான் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் குறுக்கிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், கடந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் ரூ.12.06 கோடி லாபம் ஈட்டியிருப்பதாகத் தெரிவித்தார். ஒருபுறம் ஊதியம் தர பணம் வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறும் கம்பிவட நிறுவனம், ஊதியம் கொடுத்தது போக 6 மாதத்தில் ரூ.12.06 கோடி லாபம் கிடைத்ததாக சட்டப்பேரவையில் தெரிவிக்கிறது. ஒருவேளை இன்னும் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்று கம்பிவட நிறுவனம் நினைத்தால், அதில் நடக்கும் ஊழல்களை களைந்தாலே ஆண்டுக்கு ரூ.2,000 கோடி லாபம் ஈட்டலாம். அதைவிடுத்து இலவசத் தொலைக்காட்சிகளை அழிக்க கம்பிவட நிறுவனம் துடிப்பது முறையல்ல.

மாநில அரசுகளோ அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களோ கம்பிவட ஒளிபரப்பில் ஈடுபட்டால் அரசியல் ரீதியிலான பழிவாங்கல் இருக்கும் என்பதால் தான் அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மின்னணு ஒளிபரப்பு உரிமம் வழங்க மத்திய அரசு மறுத்துவருகிறது. இத்தகைய நிலையில் கம்பிவட நிறுவனத்தின் செயல்பாடுகள் இந்த ஐயத்தை உறுதி செய்யும் வகையிலேயே உள்ளன. இலவசத் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு முடக்கப்பட்டால், அவற்றில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் வேலையிழப்பார்கள். மறைமுக வேலை பெறும் லட்சக்கணக்கானோரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகும். அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய செயல்பாடுகள் தொடர்ந்தால் தமிழகத்தில் இலவச தொலைக்காட்சிகள் செயல்பட முடியாமல் போய்விடும். இதைத்தடுக்க இப்பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

1) ஜெயா தொலைக்காட்சி குழுமத்திற்கு அளவுக்கு அதிகமாக சலுகைகள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
2) அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
3) மக்கள் தொலைக்காட்சியை முன்பிருந்த S-4 அலைவரிசைக்கு மாற்றி அதேநிலையில் தொடர்ந்து ஒளிபரப்பாக அனுமதிக்க வேண்டும். மற்ற இலவசத் தொலைக்காட்சிகளும் இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என வாக்குறுதி அளிக்க வேண்டும்.
4) அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கப்பட்டபோது அறிவிக்கப்பட்டவாறு சேவை நோக்கம் கொண்ட அமைப்பாக தொடருவதை உறுதி செய்ய, அதன் இயக்குனர்கள் குழுவில் தமிழ் செயற்கைகோள் தொலைக்காட்சி நிறுவனங்கள் சங்க நிர்வாகிகளுக்கு 50% பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.

Source: Vikatan

Previous சென்னையில் வெளுத்து வாங்கும் கோடை மழை!
Next ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நீட்டிக்கப்படுமா? வரும் 17ல் தெரியும்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *