கோகையின் பயன்படுத்திய கிரிக்கெட் வீரர் பிடிபட்டார்!


raza

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ராசா ஹசன் கோகையின் போதை மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் வரை தடை விதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கராச்சியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது ராசா ஹசனிடம் ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் (World Anti-Doping Agency- WADA )சிறுநீர் மாதிரியை ஆய்வுக்காக எடுத்தனர். இந்தியாவில் உள்ள பரிசோதனை மையத்தில் அவரது சிறுநீர் மாதிரியை ஆய்வுக்குட்படுத்திய போது, அவர் கோகையின் என்னும் போதை மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

கிரிக்கெட்டை பொறுத்தவரை கோகையின் போதை மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை. பிரபல கால்பந்து வீரர் மரடோனா 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது, கோகையின் போதை மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 11 மாதங்கள் கால்பந்து விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதற்கு முன் பல கிரிக்கெட் வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்டுள்ளனர். சோயிப் அக்தர், முகமது ஆஷிஃப் ஆகியோர் ஊக்கமருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவருமே 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஷேன் வார்ன், டியூரெட்டிக் என்ற மருந்தை உட்கொண்டு 12 மாதங்கள் தடையை சந்தித்தார். ஆனால் கிரிக்கெட் வீரர் ஒருவர் கோகையின் போதை மருந்தை உட்கொண்டு பிடிபடுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

Source: Vikatan

Previous 2 ஜி ஊழல் வழக்கில் திருப்பம்: ஆ.ராசா மீது சி.பி.ஐ. புதிய குற்றச்சாட்டு!
Next உயிர் காக்கும் மருந்து இனி பணக்காரர்களுக்கு மட்டும்தானா?

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *