அம்பேத்கர் பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!


Ambedkar

புதுடெல்லி/சென்னை: சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சட்ட மேதை அம்பேத்கரின் 125வது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு கீழ் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோரும் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை துணை தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோரும் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் சென்னை ராஜாஜி சாலை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்ட திருஉருவ படத்திற்கு தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை ராஜாஜி சாலை துறைமுகம் அருகில் உள்ள அம்பேத்கர் திருஉருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியினர் கலந்து கொண்டனர்.

சென்னை பெரியார்திடலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்பட திராவிடர் கழகத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

வாணியம்பாடி கோணாமோடு பகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற எஸ்சி எஸ்டி பிரிவு சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் ஜெ.அஸ்லம்பாஷா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஏழை எளியவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கினார்.

அருந்ததி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் வலசை இரவிச்சந்திரன் கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Source: Vikatan

Previous அமெரிக்கா பற்றி எரியும்’ வீடியோ மூலம் ஐ.எஸ். மிரட்டல்
Next இந்தியாவின் மதச் சார்பின்மையை அசைக்க முடியாது: பிரதமர் மோடி!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *