வேலூர், திருவண்ணாமலையில் மழைக்கு 5 பேர் பலி!


rain

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கி மாணவன் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆரணியில் 100 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. வேலூர் மாவட்டத்தில் அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பாக 106.5 டிகிரி அளவிற்கு வெயில் கொளுத்தியது.

நேற்று பிற்பகலில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீரென கன மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்குக்கெடுத்து ஓடியது. பலத்த மழையின் காரணமாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் மாணவன் உட்பட 5 பேர் இறந்தனர். கர்ப்பிணி உட்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதன் விவரம் : குடியாத்தம் நெல்லூர்பேட்டையை சேர்ந்தவர் இளைஞர் விக்னேஷ். பட்டதாரியான இவர் நேற்று தனது நண்பர்கள் ஜெகன், கார்த்தி, விஜய்,வெங்கடேசன், பாபு மற்றும் சிலருடன் சேர்ந்து குடியாத்தம் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வெங்கடேசன், பாபு, கார்த்தி, விஜய், ஜெகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அரக்கோணம் அடுத்த மூதூர் கிராமத்தை சேர்ந்தவர் தனம்மாள். இவரது மகன் கேசவன். இருவரும் நேற்று மாலை தங்களின் மாடுகளுடன் வீடு திரும்பினர். அப்போது மின்னல் தாக்கியதில் கேசவன் இறந்தார். படுகாயம் அடைந்த தனம்மாள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பனப்பாக்கம் அடுத்த கொண்டங்கரை பகுதியை சேர்ந்த விவசாயி நரசிம்மன், நெமிலியை அடுத்து கீழ்களத்தூர் அருகே மானாமதுரை கிராமத்தை சேர்ந்த விவசாயி கதிர்வேல் ஆகியோர் மின்னல் தாக்கி இறந்தனர்.

ஆற்காடு பகுதியில் பெய்த மழையால் பெரியஅசேன்புரா பகுதியைச் சேர்ந்த அன்சர்மா, சிலோனி பாத்திமா, உள்ளிட்ட 5 பேர் மின்னல் தாக்கி படுகாயமடைந்தனர். இவர்களில் அன்சர்மா 6 மாத கர்ப்பிணியாவார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ஆரணி அடுத்த வடுகசாத்து பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் யோகி,அஜித்குமார் ஆகியோர் அதே பகுதியில் உள்ள தங்களது நிலத்தில் இருந்த வைக்கோலை எடுத்துவந்த போது மின்னல் தாக்கியது.

இதில் அஜித்குமார் இறந்தார். மேலும், ஆரணியில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.

இதனால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Source: Vikatan

Previous காணாமல் போன தியேட்டர்கள் (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-9)
Next வெளிநாடுவாழ் இந்தியர் சுதாகரன்? (ஜெ. வழக்கு விசாரணை - 22)

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *