45 நாள் மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது!


rameshwaram

ராமேஸ்வரம்: மீன் இனப்பெருக்கத்திற்காக 45 நாள் மீன்பிடிப்பதற்கான தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இதனால் மீன்பிடி தொழிலை ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் வேலையிழந்துள்ளனர்.

மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உருவாகும் கடல்பகுதி வங்காள விரிகுடாவின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை பகுதிகளாகும். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி தொடங்கி கன்னியாகுமரியின் நீரோடி கிராமம் வரை உள்ள இந்த கடல்பகுதியில் ஆண்டு தோறும் இடைவிடாது மீன்பிடி தொழில் நடந்து வந்தது.

இதனால் கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் உள்ள கடல்வளம் குன்ற தொடங்கியது. இதன் விளைவாக கடல் வாழ் உயிரினங்களின் உருவாக்கம் குறைந்து போனது. இதே நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்வளம் அறவே அழிந்து போகும் நிலை உருவாகும் என ஆராய்சியாளர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டது. இதனை தடுக்க மீன் உற்பத்தி காலங்களில் கரையில் இருந்து 3 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்க செல்லுவதற்கு தடை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு கடந்த 2001ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் 45 நாட்கள் மீன்பிடிக்க தடைவிதிக்க நடவடிக்கை எடுத்தது. இதன்படி பழவேற்காட்டில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி வரையிலான 1076 மைல் தூர கடல் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் மே 29 வரையிலான 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் என அறிவித்தது.

இந்த காலங்களில் கரையிலிருந்து 3 கடல்மைல் தூரத்திற்கு அப்பால் மீன்பிடிப்பில் ஈடுபடும் இழுவை படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல கூடாது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்ட பகுதிகளில் உள்ள சுமார் 6700 விசைப்படகுகள் மீன்பிடிக்க முடியாது.

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, தொண்டி ஆகிய பகுதிகளில் மட்டும் 1850 விசைப்படகுகள் மீன்பிடி தடை துவங்கியதால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தடை காலங்களில் மீனவர்களுக்கு உதவி தொகையாக ரூ.4 ஆயிரம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டு தோறும் அரசால் விதிக்கப்படும் தடை காலமாக 45 நாள் மட்டும்தான். ஆனால் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள், இயற்கை இடற்பாடுகள், போதிய மீன் பாடு இல்லாதல், வேலை நிறுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் ஆண்டுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதே 70 முதல் 90 நாட்களாக சுருங்கி விட்டது. இதனால் மீன்பிடி தொழிலை நம்பியிருக்கும் பல ஆயிரம் குடும்பங்கள் வறுமையின் பிடியில் வாடும் நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் குறித்து மீன்வள ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் கேட்ட போது, “கடல்வாழ் உயிரினங்களான பல்வேறு வகை மீன்களின் இனப்பெருக்கத்திற்கு குறைந்த பட்சம் 65 முதல் 70 நாட்கள் தேவைப்படும். ஆனால் நாம் 45 நாட்களே தடைவிதித்து வருகிறோம். இதனால் 70 சதவிகித மீன்களே இனப்பெருக்கம் ஆகின்றன. 30 சதவிகிதமான மீன்களுக்கு இந்த 45 நாட்கள் என்பது போதுமானது இல்லை. ஆனாலும் இந்த தடைகாலம் துவங்கிய 2001ஆம் ஆண்டில் 5 லட்சத்து 1433 டன்னாக இருந்த மீன் உற்பத்தி தற்போது 14 லட்சத்து 44352 டன்னாக உயர்ந்திருக்கிறது. எனவே மீன்பிடி தடைகாலம் மீனவர்களுக்கு உதவியாகவே இருந்துள்ளது” என்றார்.

Source: Vikatan

Previous கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்!
Next கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திடீர் இடமாற்றம்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *