2 ஜி ஊழல் வழக்கில் திருப்பம்: ஆ.ராசா மீது சி.பி.ஐ. புதிய குற்றச்சாட்டு!


raja

புதுடெல்லி: 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆ.ராசா மீது சி.பி.ஐ. கூறியுள்ள புதிய குற்றச் சாற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு விசாரணை சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நீதிபதி ஓ.பி.ஷைனி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். 122 நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், மத்திய அரசுக்கு 30 ஆயிரத்து 984 கோடி ரூபாய் வரைதான் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டு உள்ளது.

இந்த வழக்கில் 154 சாட்சிகளை சி.பி.ஐ. விசாரணை செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கில் அனைத்து சாட்சியங்களின் விசாரணையும் முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நீதிபதி ஷைனி, இந்த வழக்கில் ஏப்ரல் 15 ஆம் தேதி இறுதிவாதம் தொடங்கும் என்று அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இறுதிவாதம் இன்று தொடங்கியது.

அப்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், கொள்கை முடிவு விவகாரத்தில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவே, மன்மோகன் சிங்கை தவறாக வழிநடத்தினார் என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

சிறப்பு அரசுதரப்பு வழக்கறிஞர் ஆனந்த் க்ரோவர் தனது வாதத்தின்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா குற்றம் சாட்டப்பட்டு உள்ள மற்றவர்களுடன் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள நிறுவனங்களுக்கு சாதகமாக நிர்ணயம் செய்யப்பட்ட தேதிக்கு முன்னதாகவே உரிமங்களை ஒதுக்கீடு செய்து உள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.

“2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஸ்வான் டெலிகாம், யுனிடெக் ஒயர்லெஸ் போன்ற தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஆ.ராசா ஒதுக்கீடு செய்ததாகவும் க்ரோவர் வாதிட்டு உள்ளார். முக்கிய கொள்கை விவகாரத்தில் சட்ட அமைச்சகம் சில அம்சங்களை, அதிகாரமிக்க அமைச்சரவைக்கு பரிந்துரை செய்தது.

ஆனால் முக்கிய கொள்கை விவகாரத்தில் முன் மொழியப்பட்ட அம்சங்களை நிராகரித்து, முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆ.ராசா சில மாற்றங்களை கொண்டுவந்தார்” என்றும் அவர் கூறினார்.

அத்துடன் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா , மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு, “அவர் (ஆ.ராசா), இவரை (மன்மோகன் சிங்) முதலில் வருபவருக்கு முன்னுரிமை மற்றும் ஏலம் விடும் தேதி ஆகிய விவகாரங்களில் தவறாக வழி நடத்தி உள்ளார்,” என்று குற்றம் சாட்டி உள்ளார்.

“வினோதமான விஷயம் தொலைத் தொடர்பு துறையில் நடந்து உள்ளது. இது (முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை கொள்கையில் மாற்றம்) குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வேண்டுமென்றே செய்யப்பட்டது என்பதைக் காட்டுகிறது,” என்று க்ரோவர் மேலும் கூறினார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீட்டுக்கு, நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற `கட்-ஆஃப்` தேதியை ஆ.ராசா மாற்றம் செய்தார் என்றும் க்ரோவர் குற்றம் சாட்டி உள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் மே-25 ஆம் தேதி நடைபெறும் என்றும், அப்போதும் இறுதிக்கட்ட வாதம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Vikatan

Previous 20 தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு!
Next கோகையின் பயன்படுத்திய கிரிக்கெட் வீரர் பிடிபட்டார்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *