20 தமிழர்கள் படுகொலை: புதுச்சேரியில் முழு அடைப்பு!


bandh

புதுச்சேரி: ஆந்திராவில் 20 தமிழர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களைக் கடத்த முயன்றதாக கூறி, 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இது தமிழகம் மற்றும் புதுவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர அரசின் இந்த கொடூர செயலை கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர அரசை கலைக்க கோரி பெரியார் திராவிடர் விடுதலை கழகம், தமிழ் தமிழர் இயக்கம், அலைகள் இயக்கம் மற்றும் இந்திய பூரான்கள் இயக்கம் உள்ளிட்ட தமிழர் அமைப்புகள் இன்று புதுவையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஜனதா பரிவார் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும் புதுவை வணிகர்கள் கூட்டமைப்பினர் பந்த் போராட்டத்தை ஆதரிக்கவில்லை.

இதனையடுத்து இன்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. புதுவையில் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. புதுவை மற்றும் தமிழக அரசு பேருந்துகள் வழக்கம்போல் ஓடின. தமிழகத்தில் இருந்து புதுவை வழியாகச் செல்லும் தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி பேருந்து நிலையம் வந்து சென்றன.

இருப்பினும், புதுவையை பொருத்த அளவில் தனியார் பேருந்துகளே அதிகம் என்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இதனால், பேருந்துகள் கிடைக்காமல் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். வழக்கம் போல் ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட சிறிய வாகனங்கள் ஓடின.

பெரும்பாலான தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையை தொடங்கி விட்டன. ஆனால், அரசு பள்ளிகளில் இன்று சமூகவியல் தேர்வு நடந்தது. தனியார் சி.பி.எஸ்.சி. பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்து விட்டன.

நகரின் முக்கிய சாலைகளான மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, புஸ்சி வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி, படேல் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உட்புற சாலைகளில் உள்ள கடைகள் திறந்திருந்தன.

மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட் பகுதிகளில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு இன்று காலையில் தமிழக அரசு பேருந்து பயணிகளுடன் புறப்பட்டது. புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள வடமங்கலம் பகுதியில் வந்தபோது மர்ம கும்பல் அந்த பேருந்து மீது சரமாரி கல்வீசி விட்டு தப்பி சென்றது. இதில் அந்தப் பேருந்தின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அதேபோல் புதுவை மாநில எல்லையான கோட்டக்குப்பம் பகுதியில் சென்னையில் இருந்து புதுவைக்கு வந்த தமிழக விரைவு பேருந்து மீது மற்றொரு கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் அந்தப் பேருந்தின் கண்ணாடிகளும் உடைந்து சேதமடைந்தன.

பந்த் போராட்டத்தை ஒட்டி நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Source: Vikatan

Previous சானியா மிர்சாவால் பாகிஸ்தானுக்கும் பெருமை: சோயிப் மாலிக் சொல்கிறார்!
Next ரத்தக்களறியில் முடிந்த மாட்ரிட் டெர்பி!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *