போக்குவரத்து தாெழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்!


bus

சென்னை: தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வு ஏற்கும்படியாக இல்லை என்று கூறி போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சென்னை குரோட்பேட்டையில் நடைபெற்று வந்தது. நேற்று நடந்த போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் உடனான 6ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் 5.5 சதவீத ஊதிய உயர்வினை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதனை அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் ஏற்றுள்ள நிலையில், வேறு சில தொழிற்சங்கள் ஏற்க மறுத்தன. இதனையடுத்து அரசின் அறிவிப்பு பற்றி அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், 12வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றும், அரசு அறிவித்த ஊதிய உயர்வு ஏற்கும்படியாக இல்லை என்று கூறி தொமுச, ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஒன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அண்ணா தொழிற்சங்கம் உள்பட 29 சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

சென்னை பல்லவன் இல்லம் அருகே பாதுகாப்பு பணிக்காக கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று விடுமுறை என்பதால் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையில் உள்ளூர் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகின்றன. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் பிற மாவட்டங்களிலும் அதிகமாகவும், குறைவாகவும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் 29 தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதன்படி தொழிலாளர்களுக்கு 5.5 சதவீத ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டு அடிப்படை ஊதியத்துடன் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும். இதன்படி ஆயிரத்து 350 ரூபாய் முதல் 5 ஆயிரத்து 941 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.

2015 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தில் 15 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். தினக்கூலி மற்றும் சேம பணியாளர்கள் 19 ஆயிரத்து 347 பேருக்கு 37.25 கோடி ரூபாய் அளவிற்கு ஊதிய உயர்வு வழங்கப்படும்.

தினக்கூலி பணியாளர்கள் 240 நாட்கள் பணியாற்றிய பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவர். வாரிசுதாரர்களின் பயிற்சிக் காலம் 3 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாகக் குறைக்கப்படும். அவர்களுக்கு அளிக்கப்படும் தொகுப்பூதியம் முதலாமாண்டு ஆயிரத்து 440 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாய் ஆகவும், இரண்டாம் ஆண்டு 2 ஆயிரத்து 190 ரூபாயில் இருந்து 4 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் இளநிலை பொறியாளராகப் பதவி உயர்வு வழங்கப்படும் என்பது உள்பட 21 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன.

Source: Vikatan

Previous திருட்டுத்தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சி: ஹெச்.ராஜா கண்டனம்!
Next உலகில் செல்வாக்கு மிகுந்த மனிதர்கள் பட்டியலில் கெஜ்ரிவால்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *