பவானிசிங்கை நீக்க கோரிய திமுக மனு அரசியல் அமர்வுக்கு மாற்றம்!


bhavani

புதுடெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் ஆஜராகி வரும் அரசு வழ‌க்கறிஞர் பவானிசிங்கை நீக்க கோரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனுவை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், “ஜெயலலிதா வழக்கில் அரசு வழ‌க்கறிஞராக ஆஜரான பவானிசிங்கின் நியமனத்தில் குளறுபடி நடந்துள்ளது. இவ்வழக்கில் பவானிசிங் ஆஜரானது சட்டப்படி செல்லாது. எனவே அவரை நீக்க வேண்டும்” என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் பவானிசிங் நியமனம் தொடர்பான மனுவில் தீர்ப்பு வெளியாகும் வரை கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவின் வழக்கில் தீர்ப்பு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதும் பணிகள் நிறைவடைந்தும், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனிடையே கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா சில நாட்களுக்கு முன்னர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் பவானிசிங்கை நீக்கக்கோரும் திமுகவின் மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அப்போது, பவானி சிங்கை நீக்கக் கோரும் அன்பழகனின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி லோகுர், அன்பழகனை மனுதாரராக ஏற்க மறுத்துவிட்டார்.

ஆனால், நீதிபதி பானுமதியோ, பவானி சிங் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக தொடர முழு அதிகாரமும் இருக்கிறது என்றார். அதே நேரத்தில், அன்பழகனை மனுதாரராக ஏற்றுக் கொள்ள சம்மதித்தார்.

நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தால் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Source: Vikatan

Previous நிதியில்லாமல் தவித்த இந்திய ஐஸ் ஹாக்கி அணிக்கு கவுதம் கம்பீர் நிதியுதவி!
Next ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தள்ளிபோகிறது!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *